

மாதவன் நடித்து வரும் 'மாறா' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவதா நடித்து வருவது உறுதியாகியுள்ளது.
தமிழில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் நடித்திருந்தார் மாதவன். இதில் அவருடைய கதாபாத்திர வடிவமைப்புக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தனது இயக்கத்தில் உருவாகும் 'ராக்கெட்ரி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் மாதவன். இதனால் வேறு எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.
தற்போது, 'ராக்கெட்ரி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தமிழில் புதிய படமொன்றில் நடிக்கத் தொடங்கியுள்ளார் மாதவன். 'மாறா' எனத் தலைப்பிட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மெளலி ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் ஷிவதா நடித்து வருகிறார். 'நெடுஞ்சாலை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஷிவதா, பின்பு 'அதே கண்கள்' படத்திலும் நடித்தார். இதனைத் தொடர்ந்து தற்போது 'மாறா' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
'வல்லவனுக்கு வல்லவன்', 'கட்டம்' மற்றும் 'இறவாக்காலம்' ஆகிய படங்கள் ஷிவதா நடிப்பில் தயாராகி வெளியீட்டுக்குத் தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.