

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது.
இரண்டு பாகமாக உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், ரியாஸ் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஜெயம் ரவி மற்றும் கார்த்தி இருவரும் சம்பந்தப்பட்ட சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கினார்கள்.
சுமார் 27 நாட்கள் திட்டமிடப்பட்ட முதற்கட்டப் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளது படக்குழு. இந்தத் தகவலை ரியாஸ் கான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதி செய்துள்ளார்.
அடுத்தகட்டப் படப்பிடிப்பை சென்னையில் திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. இதற்காக தோட்டாதரணி பிரம்மாண்டமான அரங்குகளை உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது. ஜூன் மாதம் வரை இதன் படப்பிடிப்பைத் திட்டமிட்டு வைத்திருக்கிறார் மணிரத்னம் என்பது நினைவுகூரத்தக்கது.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம்.