'தர்பார்' படம் குறித்து திரையுலகப் பிரபலங்களின் கருத்துகள்

'தர்பார்' படம் குறித்து திரையுலகப் பிரபலங்களின் கருத்துகள்
Updated on
2 min read

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று (ஜனவரி 9) வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

'தர்பார்' படத்தைப் பார்த்துவிட்டு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:

கார்த்திக் சுப்புராஜ் : 'தர்பார்' மரணமாஸ். ஐயோ தலைவா. ஓவ்வொரு ஃபிரேமிலும் என்ன ஒரு ஆற்றல், அழகு. நீங்கள் ஒரு மாயாஜாலம் தலைவா. அதிகபட்ச தலைவர் விருந்தைக் கொடுத்த முருகதாஸ், அனிருத் உள்ளிட்ட மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள். தலைவன் வேற ரகம், பாத்து உஷாரு.

இயக்குநர் அறிவழகன்: 'தர்பார்' முழுமையான சூப்பர் ஸ்டார் படம். பிரசித்த பெற்ற ரஜினி தருணங்களைக் கொண்டு வந்து ஒரு பழிவாங்கும் கதையைத் தந்திருக்கிறார். அனிருத்தும் பின்னணி இசையில் பெரிய உச்சம் தொட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ்: 'தர்பார்' அட்டகாசமாக அற்புதமாக இருக்கிறது. தலைவரைப் பார்ப்பதே அலாதி. அவ்வளவு இளமையாக இருக்கிறார். அவரது ஸ்டைல் வேற லெவல். பெண்ணின் பாசம், சண்டைக் காட்சிகளை ரசித்தேன். முருகதாஸ் இயக்கம், அனிருத்தின் பின்னணி இசை அற்புதம். படம் சும்மா கிழி.

குஷ்பு: 'தர்பார்' முழுவதும் ரஜினிகாந்த்தான். அவரைத் தாண்டி கண்கள் எங்கும் போகாது. உங்கள் கவனத்தைத் தனது கவர்ச்சி, ஸ்டைல் மூலம் காந்தம் போல ஈர்க்கிறார். இந்திய சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் அவர்தான் என்பதில் அதிசயமில்லை. இது ஒரு பொங்கல் விருந்து. திரையரங்கில் அதைக் கொண்டாடுங்கள். இந்த விருந்துக்கு நன்றி முருகதாஸ்.

சிவகார்த்திகேயன்: 'தர்பார்' தலைவரின் தனி ஆட்சி. அவரது ஆற்றல், ஸ்டைல், கவர்ச்சி என்றும் ஊக்கமளிக்கும். ரஜினிகாந்த், முருகதாஸ், அனிருத், நயன்தாரா மற்றும் ஒட்டுமொத்தக் குழுவுக்கும் பெரிய வெற்றிக்கு என் வாழ்த்துகள்.

சாந்தனு: 'தர்பார்' தலைவர் தரிசனம் துபாயில். ஒரே வார்த்தை, சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான். இவ்வளவு வருடங்களைக் கடந்து பல தலைமுறைகளை அவர் ஈர்த்து வருகிறார். நிவேதா, எவ்வளவு அழகான நடிப்பு உங்களுடையது. அனிருத்தின் பின்னணி இசை அரங்கில் சும்மா கிழிதான்.

விக்னேஷ் சிவன்: மறு ஜென்மத்தில் நம்பிக்கை உண்டா. எனக்கு உண்டு. தலைவர் தரிசனத்தை அருகில் உள்ள அரங்கில் சென்று பாருங்கள். அங்கு அன்புத் தலைவர் ரஜினிகாந்த் இளமையாக, ஆற்றலுடன், சுறுசுறுப்பாக இருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார். என்றும் சூப்பர் ஸ்டார். தலைவர் ரசிகர்களுக்கு இது பண்டிகை விருந்து. அனிருத் எல்லாவற்றையும் உடனிருந்து உயர்த்துகிறார். தனது வேலையில் உண்மையாக, வலிமையாக இருக்கிறார். வாழ்த்துகள். முருகதாஸ் நமது சுறுசுறுப்பான தலைவரைத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். நன்றி சார்.

பாவனா பாலகிருஷ்ணன்: ரஜினிகாந்துக்காக மட்டுமே பாருங்கள். தனது ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டும், பொழுதுபோக்கு தர வேண்டும் என்கிற அவரது ஈடுபாடு வருடம் ஆக ஆக அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது சரியாக இல்லாதபோது அவர் உங்களை அமைதியாக்குகிறார். தலையைக் கோதி, மெதுவாக நடக்கிறார். ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே சூப்பர் ஸ்டார். தலைவா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in