'பேட்ட' வெளியீட்டில் திருமணம்; 'தர்பார்' வெளியீட்டில் குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா; வித்தியாசத் தம்பதி

'பேட்ட' வெளியீட்டில் திருமணம்; 'தர்பார்' வெளியீட்டில் குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா; வித்தியாசத் தம்பதி
Updated on
1 min read

'பேட்ட' வெளியீட்டின்போது திருமணம் செய்து கொண்ட தம்பதியர், 'தர்பார்' வெளியீட்டில் தங்களது குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டுமே ரஜினி ரசிகர்கள், அவரது படம் வெளியாகும் போது வித்தியாசமான முறையில் கொண்டாடுவார்கள். கடந்த ஆண்டு 'பேட்ட' வெளியான சமயத்தில் உட்லண்ட்ஸ் திரையரங்கில் ரஜினி ரசிகரான அன்பரசுவின் திருமணம் நடைபெற்றது. இதன் ஏற்பாடுகளை தென் சென்னை ரஜினி மக்கள் மன்றம் செய்தது.

வழக்கமாகப் பட்டாசு, நடனம், இசை, பாலபிஷேகம் என கொண்டாடப்படும் ரஜினிகாந்த் திரைப்பட வெளியீடு, கடந்த வருடம் இவர்களின் திருமண வைபவத்துடன் வித்தியாசமாகக் களைகட்டியது தேசிய அளவில் பல ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

மேலும், கடந்த இரண்டு வருடங்களாக ஜனவரி மாதம் என்பது ரஜினி ரசிகர்களுக்கு விசேஷமானதாக மாறியிருக்கிறது. கடந்த வருடம் 'பேட்ட’, இந்த வருடம் 'தர்பார்’ எனப் பொங்கலை முன்னிட்டு இரண்டு வருடங்களில் இரண்டு ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அன்பரசு - காமாட்சி தம்பதிக்கு இந்த ஜனவரி மாதம் இன்னும் விசேஷமானது. இவர்கள் இருவரும் கடந்த வருடம் ‘பேட்ட’ படம் வெளியானபோது திருமணம் செய்து கொண்டார்கள். இந்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி அன்று, அதாவது சரியாக ஒருவருடம் கழித்து, தங்கள் குழந்தையுடன் 'தர்பார்' படத்தின் வெளியீட்டை அதே திரையரங்கில் கொண்டாடியுள்ளனர்.

மேலும், தங்கள் குழந்தையின் பெயர் சூட்டு விழாவையும் அங்கேயே ஏற்பாடு செய்துள்ளனர். குழந்தைக்குச் சிந்து என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in