

ரஜினி நடித்துள்ள 'தர்பார்' படத்தை மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரில் அலெக்ஸ் பால் மேனன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
நேற்று (ஜனவரி 9) வெளியான இந்தப் படம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. வசூல் ரீதியில் முதல் நாள் எப்படி என்பது இன்று (ஜனவரி 10) மாலை தெரியவரும்.
இதனிடையே, இந்தப் படத்தின் கதைக்களத்தில் இடம்பெற்றுள்ள காவல்துறை சம்பந்தமான லாஜிக் மீறல்கள் தொடர்பாகப் பலரும் சமூகவலைதளத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனனும் தன்னுடைய கருத்தை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
’தர்பார்’ படம் தொடர்பாக அலெக்ஸ் பால் மேனன், "நாலு நாள்ள தலைவன ஃபிட்னஸ் நிரூபிக்க வச்சது தான்யா மிகப் பெரிய ஹூமன் ரைட் வைலேஷன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், 'தர்பார்' படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் "ஐயா, டேய் தமிழ் இயக்குநர்களா இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது" என்று தெரிவித்துள்ளார் அலெக்ஸ் பால் மேனன்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்த போது, மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டவர் அலெக்ஸ் பால் மேனன். பின்பு தமிழக அரசு தொடங்கி பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து 12 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்ட்களால் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.