

'பிகில்' வசூலை முன்வைத்து, 'மாஸ்டர்' வியாபார முறை நடந்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்து வருகிறார்.
சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் தற்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். விரைவில் விஜய் - விஜய் சேதுபதி இருவரின் காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். இதனிடையே, இந்தப் படத்தின் உலகளாவிய உரிமைகள் அனைத்தையும் லலித் கைப்பற்றினார்.
மேலும், இந்தப் படத்தின் இதர மொழி உரிமைகள் தொடங்கி அனைத்துமே விற்பனையாகி விட்டது. இந்த வியாபார முறை அனைத்துமே 'பிகில்' செய்த மாபெரும் வசூலை முன்வைத்துச் செய்துள்ளனர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், 'பிகில்' படத்தின் பொருட்செலவு மிகவும் அதிகம். அதனை முன்வைத்து 'மாஸ்டர்' வியாபாரம் நடந்திருப்பதால், படக்குழுவினர் இப்போதே நல்ல லாபத்தை அடைந்துள்ளனர்.
இந்த வியாபார முறை தயாரிப்பு நிறுவனத்துக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தாலும், விநியோகஸ்தர்கள் மத்தியில் 'பிகில்' போல சிறிய அளவில் பயத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், 'கைதி' வெற்றி, 'பிகில்' வசூல் கொடுத்த இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பதால் இந்த முறையும் சாத்தியம் என்ற நம்பிக்கையில் விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள்.