Last Updated : 09 Jan, 2020 03:14 PM

Published : 09 Jan 2020 03:14 PM
Last Updated : 09 Jan 2020 03:14 PM

முதல் பார்வை:  தர்பார் 

போதைப்பொருள் கடத்தல், பெண்கள் கடத்தல் என குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் மும்பையைச் சுத்தப்படுத்த ஒரு காவல் ஆணையர் வந்தால், அவர் ஆபத்துகளைச் சந்தித்தால், அதனால் துவண்டு விழுபவர் பின் மீண்டு எழுந்து திருப்பி அடித்தால் அதுவே 'தர்பார்'.

பஞ்சாப்பில் மிகப்பெரிய ஆப்ரேஷனை முடித்துவிட்டு தன் மகள் வள்ளியுடன் (நிவேதா தாமஸ்) ஒரு பார்ட்டியில் பாட்டுப் பாடி நடனம் ஆடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் ஆதித்யா அருணாச்சலம் (ரஜினி). மும்பையில் கேங்ஸ்டர்களைக் களையெடுக்குமாறு டெல்லி தலைமை ரஜினிக்குக் கட்டளையிடுகிறது. முக்கியமான மூன்று நிபந்தனைகளுடன் மும்பை கமிஷனராகப் பணியில் அமர்கிறார் ரஜினி.

பொறுப்பேற்கும் முன்பே டெல்லி துணை முதல்வரின் மகள் கடத்தப்பட்ட செய்தி பெரிதாக வெடிக்கிறது. இந்நிலையில் ரஜினி இரண்டே மணிநேரத்தில் அவரை மீட்கிறார். இதற்குக் காரணமான மாபியா தலைவன் அஜய் மல்ஹோத்ராவைக் கைது செய்கிறார். மகனை ஜாமீனில் விடுவிக்க தொழிலதிபர் வினோத் மல்ஹோத்ரா முயன்றும் முடியவில்லை. அஜய் மல்ஹோத்ராவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. சிறையில் இருக்கும் அஜய் மல்ஹோத்ராவை விசாரணைக்காகப் பார்க்க வருகிறார் ரஜினி. அங்கு அஜய் மல்ஹோத்ரா பெயரில் வேறு ஒரு இளைஞர் இருக்கிறார்.

ரஜினியின் அந்த மூன்று நிபந்தனைகள் என்ன, அந்த நிபந்தனை அவருக்கே ஆபத்தாக முடிவது எப்படி, அஜய் மல்ஜோத்ராவின் பின்னணி என்ன, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிய அஜய் மல்ஹோத்ராவைக் கண்டுபிடிக்க முடிந்ததா, வினோத் மல்ஹோத்ரா ஏன் கொல்லப்படுகிறார், ரஜினியால் மும்பையைச் சுத்தப்படுத்த முடிந்ததா, எதிரிகளைச் சம்பாதித்ததால் ரஜினிக்கு நேர்ந்த இழப்பு என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

முழுக்க முழுக்க ரஜினியை மனதில் வைத்து மாஸ் மசாலா பாணியில் ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை எழுதியிருப்பது நன்றாகத் தெரிகிறது. அது படமாக்கப்பட்ட விதம் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெறுகிறது.

ஸ்டைல், ஆக்‌ஷன், காமெடி என படம் முழுவதும் ரஜினி ராஜ்ஜியமே பரவி நிறைந்துள்ளது. சமீபத்திய முந்தைய படங்களைக் காட்டிலும் ரஜினி இளமைத் துள்ளலுடன் நடித்துள்ளார். வசன உச்சரிப்பு, நுட்பமான அசைவுகளில் தான் கிங் என்பதை நிரூபித்துள்ளார். நாயகியைப் பார்த்தவுடன் பேச்சு வராமல் பம்முவது, பேச முடியாமல் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டதைப் போன்று உளறுவது, கை- கால்கள் உதறுவது, நயன்தாராவிடம் பேச ரிகர்சல் செய்வது என ரஜினிக்கான வழக்கமான நகைச்சுவை அம்சங்கள் இதிலும் உள்ளன. அவை அத்தனையையும் தனக்கே உரிய ஸ்டைலில் ரஜினி செய்யும்போது இன்னும் ரசிக்க வைக்கிறார்.

புத்திசாலித்தனமான ஐடியாக்களை வேண்டுமென்றே உதிர்த்துவிட்டு வில்லன்களின் பலத்தை அறியும் மதி நுட்பத்தையும் ரியாக்‌ஷன்களில் காட்டி அசத்துகிறார். மகள் மீதான பாசத்தில் பரிதவிக்கும்போதும், நிலைமையைச் சரிசெய்ய வெளியில் செல்ல ஸ்பிரிட்டுடன் கிளம்பும்போதும் இயல்பான தகப்பனைக் கண்முன் நிறுத்துகிறார். எதிர் நாயகன் கொடுக்கும் தொல்லைகளால் அவனை எப்படி முடிப்பது விரல்களால் வித்தை செய்யும் விதத்தில் நடிப்பில் கவர்கிறார். யோகி பாபுவைப் படம் முழுக்க கலாய்க்க விட்டு அப்ளாஸ் அள்ளுகிறார். பில்டப் காட்சிகள் அத்தனையிலும் அதகளம் செய்து சினிமாவில் தனக்கான இடத்தில் வெற்றிடமே இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

துணை இல்லாமல் இருக்கும் ரஜினி, கமல் ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியை செல்போனில் பார்த்துவிட்டு ஏங்குவது, அனிருத்தின் காதல் பாடலுக்கு ஹம்மிங் பண்ணுவது என ரஜினி ரகளை செய்யவும் தவறவில்லை.

லில்லி கதாபாத்திரத்தில் நயன்தாரா சில காட்சிகளில் ஒப்புக்கு வந்து போகிறார். படத்தில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. சில நகைச்சுவைக் காட்சிகளுக்கும் படத்தின் அழகியல் தன்மைக்கும் உதவியுள்ளார். திருமணப் பாடல் காட்சியும் அவருக்காகவே வைக்கப்பட்டுள்ளது.

யோகி பாபு போகிற போக்கில் சிக்ஸர் அடிக்கிறார். ''பேசிட்டு வாங்கன்னு சொன்னா பேஷண்ட் ஆகி டோக்கன் வாங்கி வர்றீங்க'', ''அஷ்டமி நவமி கௌதமி'', ''காதலர் தினம் குணால் நெனப்பு. ரோஸ் கொடுக்கப் போறீங்களா'', ''லவ் பண்ணச் சொன்னா டிரைவிங் கிளாஸ் எடுக்குறீங்களா?'' என்று விதம் விதமாகக் கலாய்க்கிறார். தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது. ரஜினியும் அதனை அனுமதித்த விதம் செம்ம.

ரஜினியின் மகளாய் நிவேதா தாமஸுக்கு முக்கியமான கதாபாத்திரம். அதை அழுத்தமாகச் செய்துள்ளார். அப்பாவை விட்டுக்கொடுக்காதது, அப்பாவுக்காக ஒரு துணையைத் தேடுவது, தனக்கு நேர்ந்ததை நினைத்து ஒற்றைக் கண்ணில் கண்ணீர் வழிய நிலைகுலைந்துபோவது, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அப்பாவின் மீது பாசமாய்ப் படுத்துக்கொள்வது என கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகிறார். மோகன்லால், கமலுக்கு அடுத்து ரஜினியின் மகளாய் நடித்ததின் மூலம் அவரது கெரியரில் முக்கியமான படமாக 'தர்பார்' அமைந்துள்ளது.

கூட்டத்தில் ஒருவராக வரும் ஸ்ரீமன், ரஜினியின் வீட்டுக்கு வந்து அவரிடம் பேசும் காட்சியில் தன் இருப்பைப் பதிவு செய்கிறார். வினோத் மல்ஹோத்ராவாக நடித்த நவாஸ் பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். புத்திசாலித்தனமான நடிப்பில் சுனில் ஷெட்டி தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மும்பையின் பரபரப்பையும், சண்டைக் காட்சிகளில் விறுவிறுப்பையும் பார்க்க முடிகிறது. ஒளி அமைப்பிலும் ரஜினி- நயனை இன்னும் அழகாகக் காட்டியதிலும் சந்தோஷ் சிவன் கேமரா மேஜிக் செய்துள்ளது. அனிருத் சும்மா கிழி பாடலில் மட்டும் அட போட வைக்கிறார். மற்றபடி ஒட்டுமொத்த உழைப்பையும் பின்னணி இசையில் கொட்டி, பாடல்களில் ஏமாற்றுகிறார்.

பீட்டர் ஹெய்ன், ராம்- லஷ்மண் சண்டைக்காட்சிகள் ஓ.கே.ரகம். ரயில்வே ஸ்டேஷன் சண்டைக் காட்சி ரஜினியின் புஜபல பராக்கிரமத்துக்காகவே வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

காக்கிச் சட்டையில் கலர்ஃபுல் ரஜினியைக் காட்ட ஏ.ஆர்.முருகதாஸ் ரொம்பவே மெனக்கிடல் செய்துள்ளார். வெறுமனே அழகியலை மட்டும் நம்பாமல் திரைக்கதையையும் வலுவாகக் கையாண்டுள்ளார். ஒரே நேர்க்கோட்டுக் கதை என்பதால் எந்தக் குழப்பமும் இல்லை. சுவாரஸ்யமான நகைச்சுவைக் காட்சிகள், எமோஷன் காட்சிகள் என்று படத்தைத் தாங்கிப் பிடித்து நிமிர வைக்கிறார். கூட்டம் கூட்டமாக கருத்து சொல்வது இப்படத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் மட்டும் மக்கள் கருத்து சொல்வதைப் போல காட்சியை வடிவமைத்துள்ளார். அதே சமயம், 'ரமணா' பாணியிலான விசாரணைப் படலங்கள் மட்டும் படத்தில் உள்ளன.

''நான் ஒரிஜினலாவே வில்லன்மா'', ''ஐ யாம் எ பேட் காப்'' போன்ற பன்ச் வசனங்களைப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தியது என ரஜினியிஸத்துக்கு வலு சேர்க்கும் அம்சங்களை முருகதாஸ் பயன்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு.

ஜெயில்ல காசு இருந்தா ஷாப்பிங் கூட போகலாம், தென்னிந்தியாவுல ஒரு சிறைக் கைதி அப்பப்போ வெளியே போய்ட்டு உள்ளே வர்றாங்க என்று அரசியல் ரீதியிலும் மறைமுகமாக ஒரு விமர்சனத்தை முருகதாஸ் முன்வைத்துள்ளார்.

இவ்வளவு செய்த முருகதாஸ் படத்தில் மருந்துக்குக் கூட லாஜிக் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. என்கவுன்ட்டர் என்கிற பெயரில் இஷ்டத்துக்குக் கொலை செய்வது, அதை விசாரிக்க வந்த மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுவது, அவர்களின் அறிக்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ரஜினியே எழுதி கையெழுத்து வாங்குவது, மும்பையை ஆட்டிப் படைக்கும் எல்லா வழக்குகளுக்கும் தனிப்படைகள் அமைக்காமல் எல்லாவற்றையும் ரஜினியே விசாரிப்பது, தம்மாத்துண்டு வில்லனாக இருந்தாலும் ரஜினியே நேரில் சென்று பந்தாடுவது, இரு நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தனி நபராக யாரின் அனுமதி இல்லாமலும் டீல் செய்வது, மும்பை காவல் ஆணையராக நியமித்த டெல்லி தலைமைக்கே சவால் விடுவது போன்ற அபத்தங்கள், லாஜிக் இடறல்கள் ஏராளம். மும்பை காவல் ஆணையர் சகல அதிகாரங்களும் சர்வ வல்லமையும் படைத்த அதிகாரியாகக் காட்டியிருப்பது எந்தவிதத்திலும் நம்பும்படியாக இல்லை.

ரஜினி என்கிற சூப்பர் ஹீரோ பிம்பம் இதையெல்லாம் மறக்கடிக்க வைக்கும் என்று நம்பி முருகதாஸ் லாஜிக் பற்றிக் கவலைப்படாமல் இயக்கியுள்ளார். இது சில இடங்களில் மட்டும் வொர்க் அவுட் ஆகிறது. இரண்டாம் பாதியின் சில இடங்கள் இழுவையாக இருப்பதால் தொய்வு ஏற்படுகிறது. நீளத்தை மட்டும் குறைத்திருந்தால் இப்பிரச்சினை வந்திருக்காது.

இவற்றைத் தவிர்த்தால், ரஜினி ரசிகர்கள் தர்பாரை திரும்பியும் விரும்பியும் பார்க்கலாம். மற்றவர்களும் எனர்ஜி பிளஸ் ரஜினிக்காக தர்பாருக்கு விசிட் அடிக்கலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x