Published : 09 Jan 2020 08:34 AM
Last Updated : 09 Jan 2020 08:34 AM

முதல் நாள் முதல் காட்சி விமர்சனம்: தர்பார்

மும்பை போலீஸ் கமிஷ்னரான ரஜினிகாந்த், மும்பை மாநகரில் நடக்கும் சமூக விரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துகிறார். மும்பைக்கே போதை மருந்து சப்ளை செய்யும் ஒரு வில்லனைக் கைதுசெய்து ஜெயிலில் போடுகிறார். சில நாட்கள் கழித்து விசாரணைக்காக அந்த வில்லனைப் பார்க்க ஜெயிலுக்குப் போனால், யாரோ ஒருவனைக் காண்பித்து ‘இவன்தான் அந்த வில்லன்’ என்கின்றனர்.

கோபமடையும் ரஜினி, ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற வில்லனைக் கண்டுபிடிக்கக் களமிறங்குகிறார். ரஜினியால் அவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இதனால் ரஜினிக்கு என்னென்ன சிக்கல்கள் உண்டாகின்றன? அவற்றை ரஜினி எவ்வாறு முறியடித்தார்? என்பதெல்லாம் பரபர திரைக்கதை.

சமூகத்துக்கு நல்லது செய்யும் ஹீரோ, அதனால் ஹீரோ குடும்பத்துக்குப் பாதிப்பு ஏற்படுவது, வெகுண்டெழும் ஹீரோ வில்லனைப் பழிவாங்குவது எனப் பழைய கதைதான். ஆனால், முழுக்க முழுக்க ரஜினி படமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரத்தில் என்றும் மாறாத சுறுசுறுப்புடன் பரபரவென இருக்கிறார் ரஜினி. தாடியில் மட்டும் வெள்ளை முடி எட்டிப் பார்க்கும் லுக், ரஜினிக்கு அழகாகப் பொருந்தியிருக்கிறது. இந்த வயதிலும் இப்படியொரு எனர்ஜியா என்று வியக்கும் அளவுக்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். குறிப்பாக, ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்.

ரஜினிக்குப் பிறகு படத்தில் கவனிக்க வைப்பவர், ரஜினியின் மகளாக நடித்துள்ள நிவேதா தாமஸ். தன் அப்பாவுக்கு ஒரு துணையைத் தேடித் தரவேண்டும் என்ற பொறுப்பாகட்டும், தந்தை விபத்தில் அடிபட்டதைப் பார்த்துக் கதறுவதாகட்டும்... அதிலும், தன்னுடைய உடல்நிலை குறித்து மருத்துவர் விவரிக்கும்போது, நிவேதாவின் கண்களில் இருந்து ஒரே கோடாக கண்ணீர் வழியும் காட்சி என வள்ளி கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாகவே தன்னுடைய பங்கைச் செய்துள்ளார்.

லில்லி கதாபாத்திரத்தில் சும்மானாச்சுக்கும் வந்து போகிறார் நயன்தாரா. கதாநாயகியென்று படத்தில் ஒருவர் இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டக் கதாபாத்திரம் என்பதால், சொல்லிக் கொள்ளும்படி அவருக்கு வேலையில்லை. ஆனால், வயதாக வயதாக இவருக்கு மட்டும் எப்படித்தான் அழகு கூடிக்கொண்டே போகிறதோ... தங்கச் சிலை போல் தகதகவென்று மின்னுகிறார். படத்தில் அவர் பயன்படுத்தியிருக்கும் ஆடைகளும் அதற்கு முக்கியக் காரணம்.

ஓரிரு காட்சிகளைத் தவிர, தான் வருகின்ற எல்லாக் காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு. மற்ற துணைக் கதாபாத்திரங்கள் யாரும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லையென்றாலும், எல்லோரும் தங்களுடைய கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

ரஜினியைப் போலவே திரைக்கதையும் ஸ்பீடாக இருப்பது இந்தப் படத்தின் ப்ளஸ். சென்டிமென்ட் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் ஸ்லோ. ஆங்காங்கே லாஜிக் மீறல்களும் உள்ளன. ஆனால், அதையெல்லாம் ரஜினியிஸம் மறக்கடித்து விடுகிறது.

‘அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா’ என்கிற ரீதியில் பின்னணி இசையை சும்மா கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறார் அனிருத். ரஜினியின் நடிப்பு மாஸ் என்றால், அனிருத்தின் இசையோடு சேர்ந்து பக்கா மாஸாகியிருக்கிறது.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ரஜினியும் நயன்தாராவும் இளமைக்குத் திரும்பியிருக்கின்றனர். ராம் - லட்சுமண், பீட்டர் ஹெய்ன் ஆகியோர்களின் இயக்கத்தில் சண்டைக் காட்சிகள் அனைத்தும் ரஜினி ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸ். ரயில்வே ஸ்டேஷனில் டான்ஸ் ஆடிக்கொண்டே அடியாட்களை ரஜினி பந்தாடுவதெல்லாம் அதகளம்.

‘ஒரிஜினலாவே நான் வில்லன்மா’, ‘ஐ யாம் எ பேட் காப்’, ‘நம்புறவனுக்கு வயசுங்கிறது நம்பர்தான்’ என ரஜினிக்கான பஞ்ச் வசனங்களும் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கின்றன.

ரஜினியின் தீவிர ரசிகர் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ, அப்படி பார்த்துப் பார்த்து ரஜினிக்கான மாஸ் விஷயங்கள் அனைத்தையும் படத்தில் வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினியைத் தங்களுடைய தலையில் தூக்கிவைத்து ரசிகர்கள் கொண்டாடுவதற்கு, இந்தப் படமும் ஒரு பங்காக அமையும்.

மொத்தத்தில் ரஜினியின் ‘தர்பார்’தான் இந்தப் படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x