

'ஆதித்ய வர்மா' பார்த்துவிட்டு துருவ் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா
கிரிசாயா இயக்கத்தில் த்ருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த், அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஆதித்ய வர்மா'. நவம்பர் 22-ம் தேதி வெளியான இந்தப் படம் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காகும்.
தமிழில் இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்தப் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் தன்னை நாயகனாக நிலை நிறுத்தியுள்ளார் துருவ் விக்ரம். தற்போது விஜய் தேவரகொண்டாவும் 'ஆதித்ய வர்மா' படத்தைப் பார்த்துவிட்டு துருவ் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா அனுப்பிய வாழ்த்து அட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, துருவ் விக்ரம் "'அர்ஜுன் ரெட்டி'யில் உங்களது துல்லியமான நடிப்பின் மீதான எங்களது நேயத்தை 'ஆதித்ய வர்மா'வில் என் கதாபாத்திரம் வெளிக் கொண்டுவர வேண்டும் என நான் விரும்பினேன். உங்களால் எப்போதும் உத்வேகம் பெறும் நான் ஒரு நாள் உங்களைப் போலவே ஒரு புரட்சியாளனாக மாற ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
'ஆதித்ய வர்மா' படத்துக்குப் பிறகு பல்வேறு முன்னணி இயக்குநர் துருவ் விக்ரமை சந்தித்து கதைகள் சொல்லி வருகிறார்கள். ஆனால், இன்னும் எந்தவொரு படத்தையும் துருவ் விக்ரம் ஒப்புக் கொள்ளவில்லை.