

மீண்டும் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்க முடிவு செய்துள்ளார் கார்த்தி.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'கொம்பன்'. ராஜ்கிரண், கோவை சரளா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து 2015-ம் ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிட்டது. வசூல் ரீதியாக இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் பாடல்கள், ஒளிப்பதிவு எனப் பலவிதங்களிலும் பாராட்டைப் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் முத்தையா இயக்கத்தில் கார்த்தியை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், தேதிகள் சரிவர அமையாத காரணத்தால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. தற்போது கார்த்தி - முத்தையா இருவரின் தேதிகளும் ஒத்துப் போகியுள்ளதால், கூட்டணி உறுதியாகியுள்ளது.
கார்த்தி - முத்தையா கூட்டணி படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு முன்பாக சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இதனால் சூர்யா - கார்த்தி - முத்தையா கூட்டணிக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
'பொன்னியின் செல்வன்', 'சுல்தான்' மற்றும் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் ஆகியவற்றை முடித்துவிட்டு முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.