

2020-ம் ஆண்டுக்கான தங்களுடைய படங்களின் வரிசையை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 'சுருளி' என்ற தலைப்பால் சர்ச்சை உருவாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், அஸ்வந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
லண்டன், மதுரை, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு இந்தப் படத்துக்கு 'சுருளி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தத் தகவல் வைரலானதைத் தொடர்ந்து, ஒய்நாட் ஸ்டுடியோஸ் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "பிப்ரவரியில் தான் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். 'சுருளி' தலைப்பு வெறும் வதந்தியே" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2020-ம் ஆண்டு திரையுலகில் தங்களுடைய படங்கள் தொடர்பாக சிறு வீடியோ ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு இந்திப் படங்களுடன் தமிழிலிருந்து 'சுருளி' என்ற தலைப்புடன், படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பால் மீண்டும் 'சுருளி' தலைப்பு குறித்த செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக விசாரித்தபோது, மீண்டும் படக்குழுவினர் இந்தத் தகவலுக்கு மறுப்பு தெரிவித்தனர்.