

'அதிகாரம்' எனத் தலைப்பிடப்பட்ட வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.பி.சரண்.
கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் 'நாணயம்', 'சென்னை 28', 'திருடன் போலீஸ்', 'ஆரண்ய காண்டம்' உள்ளிட்ட வரவேற்பைப் பெற்ற படங்களைத் தயாரித்தவர் எஸ்.பி.சரண். இவர் தயாரித்த 'ஆரண்ய காண்டம்' படத்துக்கு இப்போதுவரை இணையத்தில் வரவேற்பு இருக்கிறது.
தற்போது வெப் சீரிஸ் காலம் என்பதால், அதிலும் கால் பதித்துள்ளார் எஸ்.பி.சரண். 'அதிகாரம்' என்று தலைப்பிடப்பட்ட வெப் சீரிஸை இயக்கி, தயாரிக்கவுள்ளார். எஸ்.பி.பி. குத்துவிளக்கேற்றி இதன் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்துள்ளார்.
அன்பும் அதிகாரமும் எதிர்மறை விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, 'அதிகாரம்' அரசியலை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான கதைக்களத்துடன் தயாராகிறது. இந்தத் தொடர், அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடையத் துடிக்கும் சாதாரண இளைஞன் ஒருவனைப் பற்றிய கதையாகும்.
தேசிய அளவில் முதல் முறையாக சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசப் போகிறது 'அதிகாரம்' என்கிறார் இத்தொடரின் ஆக்கம் எழுத்து மற்றும் வசனகர்த்தாவாகிய கேபிள் சங்கர்.
இந்தத் தொடரில் ’வெள்ளைப்பூக்கள்’ தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, 'பிக்பாஸ்' புகழ் அபிராமி, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், 'சூது கவ்வும்' சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ராஜேஷ் யாதவ், எடிட்டராக பிரவீன் கே.எல், இசையமைப்பாளராக தீனா தேவராஜன், கலை இயக்குநராக ரெமியன், சண்டைப் பயிற்சியாளராக ஸ்டண்ட் செல்வா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.