

பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களைக் காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும் என்று ஜீ தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன்தாரா குறிப்பிட்டார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி, முதன்முறையாகத் தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகளுக்கு என்று பிரத்யேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா ஜனவரி 4-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் 'மக்களுக்கு விருப்பமான நடிகை' மற்றும் 'இந்திய சினிமாவில் பெண்களுக்கு உத்வேகம் அளித்ததற்காக ஸ்ரீதேவி விருது' என இரண்டு விருதுகளை வென்றார் நயன்தாரா.
இவ்விரண்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டு நயன்தாரா பேசியதாவது:
"இந்த விருதினைப் பெறும் அளவுக்கு என்னை உயர்த்திய ரசிகர்களுக்கு நன்றி. நான் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது பற்றி பலரும் கேட்கிறார்கள்.
சந்தோஷமாக இருப்பதால்தான் அது என் முகத்திலும் தெரிகிறது. சந்தோஷத்தை விட இப்போது நிம்மதியாக உணர்கிறேன். அந்த நிம்மதி யாரிடமிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். உங்கள் பெற்றோர், வாழ்க்கைத் துணை, துணையாகப் போகிறவர் என யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நமது கனவை அவருடைய கனவாக எடுத்துக்கொண்டு நமக்காக வாழ்பவராக இருக்கலாம்.
புத்தாண்டு சபதம் எதுவும் எடுக்கவில்லை. ரசிகர்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளட்டும். அவர்களின் அன்பு போதும். நான் நடிக்க வந்தபோது இப்படி நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வரவில்லை. அது யார் படமாக இருந்தாலும் சரி வெற்றி பெறும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நாயகியை மையப்படுத்தி படங்கள் வருவது பெருமையாக இருக்கிறது.
சமூக வலைதளத்தில் எதிர்மறை விஷயங்கள் அதிகமாக உள்ளன. பிடிக்காதவர்களை விட்டுவிடுங்கள். அவர்களைக் காயப்படுத்தி ஏன் சங்கடப்படுத்த வேண்டும்? எனக்குக் கடவுள் நம்பிக்கை எப்போதுமே அதிகம். யாருமே இல்லாதபோது அவர் தான் உடன் இருந்தார். அன்பாக இருங்கள் என்பது மட்டும்தான் ரசிகர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை".
இவ்வாறு நயன்தாரா பேசினார்.