

டெல்லி மாணவர்கள் போராட்டம் உள்ளிட்ட சில கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்று நினைத்த பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'தலைவர் 168' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் ரஜினி, குஷ்பு, மீனா, சதீஷ், சூரி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். நேற்றுடன் (ஜனவரி 7) முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
இன்று (ஜனவரி 8) காலை ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி. டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தனது கருத்தைத் தெரிவிப்பார் என்று பத்திரிகையாளர்கள் சென்னை விமான நிலையத்தில் குழுமியிருந்தனர். தமிழக ஊடகங்கள் மட்டுமன்றி ஆங்கில ஊடகங்களும் வந்திருந்தன.
ஆனால், விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ரஜினி, பத்திரிகையாளர்கள் மைக்குடன் இருந்த இடத்துக்கு நேராக வந்தார். "அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று தெரிவித்துவிட்டு உடனடியாகச் சென்றுவிட்டார். அங்கிருந்தால் தானே கேள்வி எழுப்புவீர்கள் என்று அவர் அவசர அவசரமாக நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
நாளை (ஜனவரி 9) ரஜினி நடிப்பில் 'தர்பார்' வெளியாகவுள்ளதால், எந்தவொரு கருத்தும் கூறி சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று ரஜினி நினைத்திருக்கலாம். ஆகையால், பட வெளியீட்டுக்குப் பின் தனது கருத்துகளைத் தெரிவிப்பார் எனக் கருதப்படுகிறது.