

'சர்கார்' படத்துக்குப் பிறகு, மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, வி.ஜே.ரம்யா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் கோடை விடுமுறை வெளியீடாக ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்துமே பிப்ரவரி மாதத்தில் முடிந்துவிடும். இதனைத் தொடர்ந்து 'தளபதி 65' படத்தின் இயக்குநர் யார் என்பதுதான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்காக பல்வேறு இயக்குநர்கள் அவரிடம் கதைகள் சொல்லி வருகிறார்கள்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ்தான் இதில் முன்னணியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், 'தர்பார்' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இன்னும் தனது அடுத்த படத்தை முடிவு செய்யவில்லை. அல்லு அர்ஜுன் படத்தை இயக்கவிருந்தார். ஆனால் சுகுமார் இயக்கவுள்ள படத்துக்குத் தேதிகள் கொடுத்துவிட்டார் அல்லு அர்ஜுன்.
இதனால், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி அமைய வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் தமிழ்த் திரையுலகில். இதில் ஒரு சிக்கல் இருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
என்ன சிக்கல்?
'சர்கார்' வெளியீட்டுச் சமயத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் கதை சர்ச்சையைக் கையாண்ட விதத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வருத்தம் இருந்ததால், மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் காவல்துறை, ஏ.ஆர்.முருகதாஸ் கைது போன்ற செய்திகளை வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பினார்கள். இதனை அவர் எதிர்பார்க்கவே இல்லை. இதனால், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறார் முருகதாஸ்.
ஆனால், விஜய்யோ தனது அடுத்த படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பதை முடிவு செய்துவிட்டார். இதில் ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் இடம் பெறுமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.