அஜித்தும் நானும் சரியான சந்தர்ப்பத்தில் இணைவோம்: ஏ.ஆர்.முருகதாஸ்
அஜித்தும் நானும் சரியான சந்தர்ப்பத்தில் இணைவோம் எனத் தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
தணிக்கைப் பணிகள் உள்ளிட்ட அனைத்துமே முடிந்து, ஜனவரி 9-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. எனவே, படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டிகள் அளித்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்தப் பேட்டிகளில், ஏ.ஆர்.முருகதாஸின் முதல் பட ஹீரோவான அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, அஜித்தை வைத்து மறுபடியும் எப்போது படம் இயக்குவார் என்ற கேள்வியை எல்லோரும் முன்வைக்கின்றனர்.
அதற்கு, “எனக்கும் அஜித்துக்கும் இடையே எப்போதும் நல்ல உறவே இருக்கிறது. ‘மிரட்டல்’ படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, நான் இந்தி, தெலுங்கு என்று மற்ற மொழிகளில் பணிபுரிய ஆரம்பித்தேன். தமிழுக்குத் திரும்பும்போது சூர்யா, விஜய்யுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அதனால், மெதுவாக ஒரு சின்ன இடைவெளி உருவாகிவிட்டது. மற்றபடி நான் அஜித் படங்களைப் பார்ப்பேன். அவரது மேனேஜரைத் தொடர்புகொண்டு எனது வாழ்த்துகளை சொல்லச் சொல்வேன். சரியான சந்தர்ப்பத்தில் நாங்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைவோம்.
சினிமா என்பது மக்களைப் பொழுதுபோக்குவதுதான். அதனால், ஒரு மிகச்சிறந்த படத்தை, மிகச்சிறந்த நாயகனுடன், எனக்குப் பிடித்த நாயகனுடன் எடுக்க எனக்கு என்றுமே ஆவல் உள்ளது” எனத் தெரிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.
