தனுஷின் ‘கர்ணன்’ படத் தலைப்பை மாற்ற வேண்டும்: சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை

தனுஷின் ‘கர்ணன்’ படத் தலைப்பை மாற்ற வேண்டும்: சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை
Updated on
1 min read

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘கர்ணன்’ படத் தலைப்பை மாற்ற வேண்டும் என சிவாஜி ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துரை செந்தில்குமார், கார்த்திக் சுப்பராஜ் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடந்த 3-ம் தேதி திருநெல்வேலியில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை ராஜிஷா விஜயன் நடிக்கிறார். மலையாள நடிகர் லால், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு ‘கர்ணன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் அறிவித்தார் எஸ்.தாணு. “அன்பு, இரக்கம், கருணை உள்ளவர் மட்டுமல்ல... வெற்றியையும் தருபவர்” என ட்விட்டரில் பதிவிட்ட எஸ்.தாணு, படத்தின் பூஜை புகைப்படத்தையும் வெளியிட்டார்.

இந்நிலையில், ‘கர்ணன்’ என்ற தலைப்பை மாற்றக் கோரி சிவாஜி சமூகநலப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன், தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “தங்கள் தயாரிப்பில் ‘கர்ணன்’ என்ற பெயரில் திரைப்படம் உருவாவதாகப் படித்தேன். வருத்தம் அளிக்கிறது. நடிகர் திலகத்தின் மகாபாரதக் ‘கர்ணன்’ திரைப்படப் பெயரை மீண்டும் பயன்படுத்துவது சரியல்ல. அதுவும் தங்களின் தயாரிப்பில் என்பது மிகுந்த வருத்தம்.

பெயரில் ஏதாவது இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல, நடிகர் திலகம் ரசிகர்களின் ஏகோபித்த கோரிக்கை. ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் சந்திரசேகரன்.

சிவாஜி நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான படம் ‘கர்ணன்’. மகாபாரதக் கதையின் கர்ணன் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தை, பி.ஆர்.பந்துலு இயக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in