

ஜீவா நடித்துள்ள ‘சீறு’ படம், பிப்ரவரி 7-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த ‘றெக்க’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னசிவா. அதன்பிறகு சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அது கைகூடாமல் போகவே, சிம்புவுக்குப் பதில் ஜீவாவை வைத்து அந்தப் படத்தைத் தொடங்கினார்.
‘சீறு’ எனத் தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படத்தில், ஹீரோயினாக ரியா சுமன் நடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த இவர், தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இதுதான் அவர் நடித்துள்ள முதல் தமிழ்ப்படம். நவ்தீப் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், சதீஷ், வருண் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்க, லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். 2018-ம் ஆண்டு இறுதியில் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ம் தேதி ‘சீறு’ படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘ஜிப்ஸி’ படம், சில பிரச்சினைகளால் வெளியாகாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அருண் விஜய், பியா பாஜ்பாய், கார்த்திகா நடிப்பில் ரத்னசிவா முதன்முதலாக இயக்கிய ‘வா டீல்’ படமும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.