Published : 06 Jan 2020 02:37 PM
Last Updated : 06 Jan 2020 02:37 PM

தீபாவளிக்கு முன்பே வெளியாகிறதா ‘தலைவர் 168’?

ரஜினி நடித்துவரும் ‘தலைவர் 168’ படத்தை, தீபாவளிக்கு முன்பே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற வியாழக்கிழமை (ஜனவரி 9) உலகம் முழுக்க இந்தப் படம் வெளியாகிறது. ஜனவரி 8-ம் தேதியே அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ திரையிடப்படுகிறது.

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்காலிகமாக ‘தலைவர் 168’ என அழைக்கப்பட்டு வருகிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், ரஜினியின் தங்கையாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஹைதரபாத்தில் தொடங்கிய முதல் கட்டப் படப்பிடிப்பில் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு, விரைவில் புனேவில் தொடங்க உள்ளது. சுமார் 20 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். பொங்கலுக்கு ‘தர்பார்’ ரிலீஸ் ஆவதால், தீபாவளிக்கு இந்தப் படத்தை வெளியிட முதலில் படக்குழு திட்டமிட்டது.

ஆனால், அதற்கு முன்பே படத்தை வெளியிடலாம் என்ற யோசனையில் இறங்கிய படக்குழு, அதற்கானத் திட்டமிடல்களைச் செய்துள்ளது. அதன்படி, வருகிற ஆகஸ்ட் மாதம் ‘தலைவர் 168’ படம் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x