திரையுலகில் உங்கள் இலக்கு என்ன? - விஜய் சேதுபதி சுவாரசிய பதில்

திரையுலகில் உங்கள் இலக்கு என்ன? - விஜய் சேதுபதி சுவாரசிய பதில்
Updated on
1 min read

திரையுலகில் உங்கள் இலக்கு என்ன என்ற கேள்விக்கு, விஜய் சேதுபதி சுவாரசியமாகப் பதிலளித்தார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி, முதன்முறையாக தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகளுக்கு என்று பிரத்யேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை, அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே. விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில், ‘சமூக அக்கறையுள்ள நடிகர்’ என்ற விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ஆர்.ஜே. விஜய், "ஹீரோ, வில்லன் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்கிறீர்கள். உங்களுடைய இலக்கு என்ன?" என்ற கேள்வியை விஜய் சேதுபதியிடம் எழுப்பினார்.

அதற்கு விஜய் சேதுபதி, "நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆசைப்படலாம். நீங்கள் ஆசைப்படுவதை ஒரு வியாபாரி வந்து கெடுத்துவிட முடியும். வியாபாரிகள் அவ்வளவு பெரிய சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் உங்களை அண்டாமல் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் இஷ்டப்பட்டதை பண்ணுவதுதான் நல்லது. அப்போதுதான் நீங்கள் நீங்களாகவே இருக்க முடியும்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், ஒரு நடிகனுக்கு 4 படங்கள் ஓடிவிட்டால், இமேஜ் என ஒன்றை உருவாக்குவார்கள். அந்த இமேஜுக்கு நீங்கள் இதெல்லாம் பண்ண வேண்டும், இப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் நடிகனாக இருப்பதுதான் என்னுடைய இமேஜ் என்று நம்புகிறேன். நடிகனாக இருப்பதில் ரொம்பவே சந்தோஷப்படுகிறேன்.

இந்தக் கலையுலகில் இருப்பதால்தான் இத்தனைக் கோடி ஜனங்களைத் தொட முடிகிறது. அதுவொரு பெரிய சக்தி. இப்போதே ரொம்ப சக்திவாய்ந்த இடத்தில்தான் இருக்கிறேன். என் மொழியைத் தாண்டி, என் நாட்டைத் தாண்டி கூட என்னால் தொட முடிகிறது.

ஒருவேளை இன்னொரு பூமி இருந்தால், அங்கும் என் படம் ஓடினால், அங்கு சென்றும் மக்களைத் தொட முடியும் என நினைக்கிறேன். இமேஜ் என்பது ரொம்ப சின்னது. அதுபோன்ற பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தில் இருக்க விரும்பவில்லை" என்று பதிலளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in