நயன்தாரா அளித்த உத்வேகம்: ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி

நயன்தாரா அளித்த உத்வேகம்: ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி
Updated on
2 min read

நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நயன்தாரா அளித்த உத்வேகம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாக தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகளுக்கு என்று பிரத்யேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவை, அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே. விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த விழாவில், சிறந்த நடிகைக்கான விருது 'கனா' படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை, இயக்குநர் சீனு ராமசாமி வழங்கினார். அவர் விருது பெறும்போது தனுஷ், நயன்தாரா ஆகியோர் இருந்தனர்.

சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியபோது, " 'கனா' படத்துக்காக இதுவரை 15 விருதுகள் வரை வாங்கியிருப்பேன் என நினைக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்றாலும், நம்பிக்கை வைத்து பயிற்சியளித்து நடிக்க வைத்தனர்.

இந்தத் தருணத்தில் தனுஷ் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். 'காக்கா முட்டை' படத்துக்காக நீங்கள் நிறைய விருதுகள் வாங்குவீர்கள் என்று நம்பிக்கையூட்டினார். மேலும், என்னைப் பற்றிப் பெருமையாக நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் பேசினார்.

மேலும், நயன்தாரா மேடத்துக்கும் நன்றி. அவர்தான் இன்றைய நாயகிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம். நாயகியை மையப்படுத்திய படங்கள் வெறும் விமர்சன ரீதியில் வெற்றி என்ற நிலை இருந்தபோது, பணம் வசூல் பண்ணும் என்று நிரூபித்தார் நயன்தாரா. நாயகியை மையப்படுத்திய படங்களுக்கும் வியாபாரம் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவர்தான்.

சீனு ராமசாமி சார் கையால் விருது வாங்கியதை மறக்க முடியாது. ஏனென்றால், 'தர்மதுரை' படத்தின்போது, "உனக்கு இந்திய முகம். நீ எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். அப்படியொரு முக அமைப்பு உனக்கு இருக்கிறது" என்று கூறினார்.

அப்பா, இரண்டு அண்ணன்களை இழந்துள்ளேன். ஆகையால், அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே ஓடத் தொடங்கினேன். இப்போது என் வளர்ச்சியில் அவர் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்” என்றார்.

தன்னைப் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியபோது, இருக்கையில் இருந்தபடியே தன் நன்றியைத் தெரிவித்தார் நயன்தாரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in