

ஜீ தமிழ் விருதுகள் விழாவில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதை சூசகமாக உறுதி செய்தார் கமல்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாக தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகளுக்கு என்று பிரத்யேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை, அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே. விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த விழாவில், 'மக்களுக்குப் பிடித்த இயக்குநர்' என்ற விருது 'கைதி' படத்துக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கமல் வழங்கினார்.
கமலிடம் இருந்து விருது பெற்ற லோகேஷ் கனகராஜ் பேசியபோது, "நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியவில்லை. என் வாழ்க்கையில் நான் செய்த நல்ல விஷயம் என்னவென்றால், கமல் சாரின் அனைத்துப் படங்களையும் பார்த்துவிடுவேன். அவருடைய படங்கள் கொடுத்த உத்வேகத்தில்தான் 'கைதி' படத்தை இயக்கினேன். இன்று கமல் சார் கையால் விருது பெறுவதை நினைக்கும்போது, வார்த்தைகள் இல்லை" என்று தெரிவித்தார்.
அப்போது பேசிய கமல், "என்னுடைய படங்கள் ஒருவருக்கு உத்வேகமாக இருந்ததில் மகிழ்ச்சியே. ஆகையால், 'கைதி' படத்துக்கு நானும் ஒரு இயக்குநர் என்று சொல்லலாம். இன்னும் நிறைய விஷயம் இருக்கிறது. அதை நேரம் வரும்போது சொல்கிறேன்" என்று தெரிவித்தார் கமல்.
இதன் மூலம் தனது நிறுவனத்துக்கு லோகேஷ் கனகராஜ் படம் இயக்கவுள்ளதை சூசகமாகத் தெரிவித்துள்ளார் கமல் என்பது தெளிவாகிறது. தற்போது விஜய் நடிக்கும் 'மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவதால், இதனை வெளிப்படையாக கமல் அறிவிக்கவில்லை.