

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஜீ தமிழ் விருதுகள் விழாவில் பேசினார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாக தமிழ்த் திரையுலகப் படைப்பாளிகளுக்கு என பிரத்யேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா கடந்த சனிக்கிழமை (ஜனவரி 4) பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவை, அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே. விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்த விழாவில், 'மக்களுக்குப் பிடித்த இயக்குநர்' என்ற விருது 'கைதி' படத்துக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை கமல் வழங்கினார்.
மேடையில் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, ரசிகர்கள் பலரும் 'மாஸ்டர்' என கூச்சலிட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் அர்ச்சனா, “ 'மாஸ்டர்' படம் தொடர்பாக அப்டேட் கேட்கின்றனர். என்ன சொல்றீங்க?” என்று லோகேஷ் கனகராஜிடம் கேட்டார்.
அதற்கு, "இப்போதைக்கு எந்த அப்டேட்டும் தரமுடியாத சூழல். ஒன்று மட்டும் சொல்லலாம். 4-வது கட்டப் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி சார் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறோம். இன்னும் 10 நாட்களில் விஜய் - விஜய் சேதுபதி காட்சிகளின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். அதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம்" என்று பதிலளித்தார் லோகேஷ் கனகராஜ்.