

இன்னும் போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்று கே.பாலசந்தர் பெயரில் வழங்கப்பட்ட விருதினைப் பெற்றுக் கொண்டு உருக்கமாகப் பேசினார் இயக்குநர் ஷங்கர்
ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாகத் தமிழ் திரையுலகிற்கு என்று பிரத்தியேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா நேற்று (ஜனவரி 4) பிரம்மாண்டமாகச் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவினை அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே.விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இதில் இந்திய சினிமாவில் சிறந்து விளங்குவதற்காக கே.பாலசந்தர் விருது இயக்குநர் ஷங்கருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை கமல் மற்றும் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசுவாமி இணைந்து வழங்கினார்கள்.
இந்த விருதினைப் பெற்றுக் கொண்டு இயக்குநர் ஷங்கர் பேசும் போது, "பாலசந்தர் சாரிடம் உதவியாளராக சேர வேண்டும் என எண்ணுவேன். பல நாள் தயக்கத்திலேயே அவரிடம் கேட்கவே இல்லை. கடைசியில் ஒரு நாள் தூங்கவே இல்லை. எப்படியாவது நாளை காலை அவரைப் போய் சந்தித்து உதவியாளராகச் சேர வேண்டும் என எண்ணி எல்லாம் எழுதி வைத்துவிட்டுத் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்தவுடன் அந்த தைரியம் எல்லாம் போய்விட்டது. என்னிடம் சேருவதற்கு என்ன தகுதியிருக்கும் என்று கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்வது என்ற பயம் தான் அதிகமாக இருந்தது. அதனாலேயே அவரைச் சந்திக்கவே இல்லை.
பின்பு நாடகத்தில் சேர்ந்து, அப்படியே எஸ்.ஏ.சி சாரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். நான் உதவி இயக்குநராக சேரும் காலத்தில், கே.பாலசந்தர் சார் 25 ஆண்டுகள் வெற்றி இயக்குநராக நிலைத்து நின்றார். நாம் ஒரு 15 வருடம் வெற்றியாளராக இருந்தால் போதும் என்று தான் பணிபுரிய ஆரம்பித்தேன். இன்றைக்கு 25 வருடங்கள் கடந்திருக்கிறேன் என்றால், அதற்கு ரசிகர்களின் கைத்தட்டல் இந்த மாதிரி விருதுகள் தான் காரணம்.
நான் உதவி இயக்குநராகி 15 ஆண்டுகள் ஆன பின்பும் கூட, வெற்றி இயக்குநராக சுமார் 40 ஆண்டுகள் இருந்தார் கே.பி சார். இளையராஜா சார், ரஜினி சார், கமல் சார் இவர்களை எல்லாம் பார்க்கும் போது நாமெல்லாம் ஒன்றுமே இல்லை, போக வேண்டிய தூரம் நிறைய உள்ளது என எண்ணத் தோன்றுகிறது. அதே நேரத்தில் கடைசி வரைக்கும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் எனப் புரிகிறது. இந்த விருதினை ஊக்கமாக எடுத்துக் கொண்டு ஓடுவேன்.
நான் கமல் சாருடைய ரசிகன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு விழாவில் அவரைச் சந்தித்து கை கொடுத்தேன். அப்போது இருந்த சந்தோஷம், இப்போது அவர் கையில் விருது வாங்கும் போதும் இருக்கிறது. கமல் சார் ஒரு முழுமையான நடிகர். அவருடைய கையால் இந்த விருது வாங்கும் போது முழுமையான இயக்குநராக முழுவீச்சில் பணிபுரிவேன்” என்று பேசினார் ஷங்கர்.