

கே.பாலசந்தருக்கும், ஷங்கருக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்பதை புஷ்பா கந்தசுவாமி விளக்கிப் பேசினார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாகத் தமிழ் திரையுலகிற்கு என்று பிரத்தியேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா நேற்று (ஜனவரி 4) பிரம்மாண்டமாகச் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவினை அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே.விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இதில் இந்திய சினிமாவில் சிறந்து விளங்குவதற்காக கே.பாலசந்தர் விருது இயக்குநர் ஷங்கருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை கமல் மற்றும் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசுவாமி இணைந்து வழங்கினார்கள்.
விருதினைப் பெற்றுக் கொண்டு ஷங்கர் உருக்கமாகப் பேசினார். அதனைத் தொடர்ந்து புஷ்பா கந்தசுவாமி பேசும் போது, "அப்பாவின் பெயரால் ஷங்கர் சாருக்கு விருது. சிறப்புமிக்க இந்த விருது ஒரு படத்துக்கோ, காலத்துக்கோ நிற்பது அல்ல. சிறப்பு என்பதை வாழ்க்கை நெறியாக அப்பா எடுத்துக் கொண்டார். அதனால் தான் அவர் மறைந்து இத்தனை நாள் ஆனாலும் கூட, அவர் பெயரைச் சொல்லி இவ்வளவு தூரம் அவரை மதிப்பதும், கொண்டாடப்படுவதும் நடக்கிறது.
கே.பி சார் படங்களையும் ஷங்கர் சார் படங்களையும் பார்க்கும் போது சில ஒற்றுமைகள் இருக்கும். அவர்களுடைய படைப்பில் இருந்த ஒரு சமூக அக்கறை. படத்தின் பட்ஜெட் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சமூக அக்கறை என்பது ஒரு அடிநாதமாகப் படத்தில் இருக்கும். அதே மாதிரி, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் காட்டுகிற ஒரு நேர்மை. பாலசந்தர் படத்துக்குப் போறேன், ஷங்கர் படத்துக்குப் போறேன் என்னும் போது எதை எதிர்பார்த்து வருகிறார்களோ அது படத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக ரொம்ப மெனக்கிடுவார்கள். அந்த விஷயத்தில் இருவரையும் ஒரே மாதிரி பார்க்கிறேன்.
பாலசந்தர் நடிப்புச் சொல்லிக் கொடுத்து எத்தனையோ நடிகர்கள் உருவானார். அதே மாதிரி தொலைக்காட்சிக்கும் நிறைய செய்திருக்கிறார். அதே மாதிரி ஷங்கர் கூட கம்யூட்டர் கிராபிக்ஸ் துறைக்கு நிறையச் செய்திருக்கிறார். இன்று இந்தியாவில் அந்தத் துறை அனைவரையும் கவர்ந்துள்ளதற்கு ஷங்கர் ஒரு காரணம். இந்த விஷயத்தில் எல்லாம் அப்பாவின் ஒற்றுமைகளை உங்களிடம் பார்க்கிறேன்” என்று பேசினார் புஷ்பா கந்தசாமி.
மேலும், அப்பா வாங்கிய பரிசுப் பொருட்களைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறோம். அதில் ஒரு பொருளை எடுத்து ஷங்கர் சாருக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று தன் பேச்சை முடித்தார் புஷ்பா கந்தசாமி. அதனைத் தொடர்ந்து தலைப்பாகை ஒன்றை கமலிடம் கொடுத்தார். அதை இயக்குநர் ஷங்கருக்கு அணிவித்தார் கமல்.
இந்த நினைவுப் பரிசு தொடர்பாக ஷங்கர், "வார்த்தைகள் இல்லை. இதைக் கண்டிப்பாகப் பொக்கிஷமாகப் பாதுகாப்பேன்" என்று தெரிவித்தார்.