

முட்டாளாக்குவது மாதிரி யார் பேசினாலும் நம்பாதீர்கள் என்று ஜீ தமிழ் விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி பேசினார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாகத் தமிழ் திரையுலகிற்கு என்று பிரத்தியேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா நேற்று (ஜனவரி 4) பிரம்மாண்டமாகச் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவினை அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே.விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இதில் சமூக அக்கறையுள்ள நடிகர் என்ற விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்டு விஜய் சேதுபதி பேசும் போது, "சமுதாயம் இல்லையென்றால் தனிமனிதனே கிடையாது. தனிமனிதர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தது தான் சமுதாயம். யாரும் யாரையும் சார்ந்து வாழாமல் இருக்கவே முடியாது. சமுதாயத்தில் வாழ்கிறோம். அது ரொம்ப முக்கியமானது.
நம் வாழ்க்கைத் துணையை இந்தச் சமுதாயம் தான் கொடுக்கிறது. சமுதாயத்தில் அக்கறையில்லாமல் யாரும் இருக்கவே முடியாது. நமது அடுத்த சமுதாயம் வாழ்வதற்கு தற்போதைய சமுதாயம் ரொம்பவே முக்கியம். என் மக்களிடம் ஒன்று மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். நம்மை உணர்ச்சி வசப்படுவது மாதிரி, தூண்டுகிற மாதிரி, முட்டாளாக்குவது மாதிரி எவன் பேசினாலும் நம்பாதீர்கள்.
சமூக அக்கறையுள்ள நடிகர் என்ற விருதுக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. அது ரொம்ப பெரிய வார்த்தை. இதை சுமப்பது பெரிய பாரம். ஆகையால் இந்த விருதை வீட்டில் எங்கேயாவது ஓரமாக வைத்துவிடுவேன்" என்று பேசினார் விஜய் சேதுபதி.