மீண்டும் சர்ச்சையில் 'தர்பார்': ரஜினிக்கு வேண்டுகோள்; அனிருத் மீது குற்றச்சாட்டு

மீண்டும் சர்ச்சையில் 'தர்பார்': ரஜினிக்கு வேண்டுகோள்; அனிருத் மீது குற்றச்சாட்டு
Updated on
2 min read

'தர்பார்' படத்தின் இசைக்கு இசை சங்கத்திலிருந்து அதிகமான நபர்களை உபயோகப்படுத்தவில்லை என்ற சர்ச்சை உருவாகியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தணிக்கைப் பணிகள் உள்ளிட்ட அனைத்துமே முடிவுற்று, ஜனவரி 9-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தச் சமயத்தில் இசைச் சங்கத்திலிருந்து சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இந்தச் சங்கத்தின் தலைவர் இசையமைப்பாளர் தினா நேற்று (ஜனவரி 4) மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது தினா, "ஜனவரி 9-ம் தேதி 'தர்பார்' படம் வெளியாகவுள்ளது. அதற்கு முதலில் வாழ்த்துகள். மொத்தமாக 23 சங்கங்கள் இருக்கிறது. அதில் 22 சங்கங்களில் உள்ளவர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். மேக்கப் , சண்டை, தயாரிப்பு என ஒவ்வொரு சங்கத்திலுமிருந்து 500 முதல் 1000 பேர் வரை இருக்கும். அவர்கள் அதில் பணம் சம்பாதித்திருக்கிறார்கள்.

இதில் ஒரு அவலமான நிலை என்னவென்றால், இந்தப் படத்தில் எங்களுடைய சங்கத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே வேலை செய்திருக்கிறார்கள். அதற்கான பில் எங்களுக்கு வந்திருக்கிறது. ரஜினி சார் மாதிரியான பெரிய நடிகர்களின் படத்துக்கு 4-5 மட்டுமே வாசித்தால், இந்தச் சங்கத்தை இழுத்து மூடவா முடியும். இசையைத் தவிர எங்களுக்கு வேறு என்ன தொழில் தெரியும்.

ரஜினி சார் இதுவரை 160 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அவருடைய பல படங்களில் தொழிலாளர்கள் வேலை செய்து சம்பாதித்திருக்கிறார்கள். ஆனால், தற்போது 'தர்பார்' படத்துக்காக எங்கள் சங்கத்திலிருந்து வெறும் 5 பேர் மட்டுமே வாசித்திருக்கிறார்கள். இது நியாயமா?. சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு ஒரு வேண்டுகோள். எல்லா சங்கத்தையும் உபயோகிப்பீர்கள். எங்கள் சங்கத்தை ஏன் மறந்தீர்கள்?

உங்களுடைய அடுத்த படத்திலாவது எங்கள் இசை சங்கத்துக்கு ஒரு வாழ்வு தாருங்கள். இந்தச் சங்கத்தில் 1500 பேர் வரை உறுப்பினராக இருக்கிறார்கள். அவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே வாசித்தால், நாங்கள் எங்குச் செல்வோம்?. 'பேட்ட' படத்துக்கு நீங்கள் உபயோகிக்கவில்லை அனிருத், இந்தப் படத்துக்காவது உபயோகம் செய்யுங்கள் என்று 2 மாதத்துக்கு முன்பு வேண்டுகோள் வைத்தேன். கண்டிப்பாகப் பயன்படுத்துகிறேன் என்று உத்திரவாதம் அளித்தார்.

சமீபத்தில் அனைத்து இசையமைப்பாளர்களும் எங்களுடைய இசை சங்கத்துக்கு ஆட்களை உபயோகிக்க வேண்டும். வெளிநாட்டு ஆட்களை உபயோகிக்கும் முன்பு எங்களிடம் அனுமதி கேட்க வேண்டும் என்ற சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தோம். வெளிநாட்டு ஆட்களை நாங்கள் உபயோகிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, அவர்களுக்கு நிகராக எங்களையும் உபயோகியுங்கள் என்று தான் சொல்லியிருக்கிறோம்.

இப்போதுள்ள சகோதரர்கள் நம்மை நம்பி 1500 பேர் இருக்கிறார்களே என்பதை மறந்துவிடுகிறார்கள். அப்படி மறக்காமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம். அனிருத் இனிமேல் இந்த தவறைப் பண்ணக் கூடாது. அனைத்து இசையமைப்பாளர்களுமே எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்” என்று பேசினார் தலைவர் தினா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in