

'பிகில்' வசூல் நிலவரத்தைக் கணக்கில் கொண்டு, தனது சம்பளத்தை அதிரடியாக ஏற்றியுள்ளார் விஜய்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், இந்துஜா, வர்ஷா பொல்லாமா, யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்தது. இதன் தமிழக உரிமையை கடும் போட்டிக்கும் இடையே கைப்பற்றி வெளியிட்டது ஸ்கிரீன் சீன் நிறுவனம்.
இந்தப் படம் இவ்வளவு பெரிய வசூலைச் செய்யுமா என்று விநியோகஸ்தர்கள் தயங்கினார்கள். ஆனால், அனைவரது தயக்கத்தையும் உடைத்து வசூல் செய்தது 'பிகில்'. மேலும், தமிழகத்தில் 'பாகுபலி 2' படம் தான் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை உடைத்தது 'பிகில்'. இந்த வசூலின் மூலம் புதிய உச்சத்தைத் தொட்டார் விஜய்.
விஜய்யின் இந்தச் சாதனையால் தயாரிப்பாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தற்போது, இந்த வசூலை வைத்து விஜய் எடுத்துள்ள முடிவு, தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. என்னவென்றால், தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக விஜய் உயர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் ரஜினி மட்டுமே ரூ.100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். அவரைத் தொடர்ந்து ரூ.100 கோடி சம்பளம் என்ற இலக்கை எட்டியுள்ளார் விஜய். இந்தச் சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்டு, அட்வான்ஸ் தொகை அளித்துள்ளது சன் பிக்சர்ஸ். 'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு விஜய்யின் அடுத்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்குத்தான் என்கிறார்கள் திரையுலகில்.