

'சில்லுக் கருப்பட்டி' படம் ஒரு மறக்கமுடியாத கவிதை என்று இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சில்லுக் கருப்பட்டி'. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தின் உரிமையைக் கைப்பற்றி, சக்திவேலன் வழியே வெளியிட்டுள்ளது.
விமர்சன ரீதியாக இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ஹலிதா ஷமீமை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் மற்றும் சசி ஆகியோர் இணைந்து ஹலிதா ஷமீமுக்கு ஆள் உயர மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்தனர்.
’சில்லுக் கருப்பட்டி’ படம் பார்த்துவிட்டு இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பதிவில், "அழகான, அர்த்தமுள்ள, இனிமையான, புதிய, உணர்வுபூர்வமான, அன்பான படம். அடிபட்ட காக்கை, ஆமைகளுக்கான நடை, நிழல் முத்தம், அலெக்ஸா என எல்லாம் மறக்கமுடியாத கவிதை. அற்புதமான படைப்பு இயக்குநர் ஹலிதா ஷமீம். தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.
ஷங்கர் வாழ்த்துக்கு 'சில்லுக் கருப்பட்டி' படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் தனது ட்விட்டர் பதிவில், "மிக்க நன்றி சார். படம் பற்றிய உங்கள் எண்ணங்கள் குறித்து பெரு மகிழ்ச்சி. எங்களுக்கு இது மிக முக்கியமான ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.