

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி வந்த படத்தை, ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்கள்.
'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் பணிகளில் மூழ்கினார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி. முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டார். இதில் பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி நடிக்கப் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கப்பட்டது.
தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக 30 நாட்களில் முடித்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, "படக்குழு அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமானது. ஒவ்வொருவரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் உழைப்பையும் தந்துள்ளார்கள்.
ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த சிரமமான சுற்றுப்புறச் சூழலில் மிகுந்த கஷ்டத்திற்கு இடையே 30 நாட்கள் தொடர்ந்து படம்பிடித்தோம். கடும் பனிப்பொழிவில் நடிகர்கள் பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் இப்படப்பிடிப்பை முழுதாக முடித்து விட முடியுமா எனச் சந்தேகத்தில் இருந்தேன். ஆனால் அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். ஒளிப்பதிவாளர் கவின்ராஜ் மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர். அவரும் அவரது குழுவும் இல்லையெனில் இப்படப்பிடிப்பு சாத்தியமாகியிருக்காது.
இரண்டு சகோதரிகள் தங்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்குப் பயணமாகிறார்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் அதை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும்" என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி