

இன்பாவும் (லிஜேஷ்), நர்மதா வும் (காயத்ரி) திருமணம் செய்துகொள்ளாமல் ஒன் றாக வாழ்ந்து வருகின்றனர். மர்ம மான முறையில் நர்மதா கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி லுனா (விஷ்ணு பிரியா), தன் துறை நண்பரான அக்னியின் (ராம் அருண் கேஸ்ட்ரோ) உதவியை நாடுகிறார். நர்மதா ஏன் கொல்லப்பட்டார், கொலையாளி யார் என்பதை இந்த காவல் நண்பர்கள் குழு கண்டுபிடித்ததா, இல்லையா என்பது மீதிக் கதை.
தோழிக்காக புலன்விசாரணை செய்ய முன்வரும் தடயவியல் துறை காவல் அதிகாரியான நாய கன் அக்னிக்கு, இருட்டைக் கண் டாலே பயப்படும் பிரச்சினை. அதை யும் மீறி, தடயமே இல்லாத சூழ் நிலையில், கொலையை துப்பு துலக்குவதாக அமைக்கப்பட்ட கதாபாத்திர வடிவமைப்பு புதிதாக, சவால் நிறைந்ததாக உள்ளது.
ஆனால், நாயகனை தடய வியல் அதிகாரியாக காட்டுவதா, காவல் அதிகாரியாக காட்டுவதா என இயக்குநருக்கு ஏகக் குழப்பம். இரண்டையும் அவரே செய்கிறார். குற்றங்களைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு உதவும் துறை தான் தடயவியல் என்ற அடிப்படை யான லாஜிக்கை மீறிவிடுகிறார் இயக்குநர்.
சுற்றி வளைக்காமல், படம் தொடங்கிய உடனேயே நேரே கதைக்குள் அழைத்துச் சென்று விடுகிறது திரைக்கதை.
பொதுவாகவே சினிமாக்களில், கொலை நடந்த இடத்தில் ஒருசில காட்சிகளில் மேலோட்டமாகவே தடயவியல் துறையின் பணிகள் காட்டப்படும். இப்படத்தில், குற்றங் களைக் கண்டுபிடிக்க தடயவியல் துறை எந்த அளவுக்கு உதவுகிறது என்பதை சற்று விரிவாகவே படமாக்கி உள்ளனர்.
கொலைக்கான ஒவ்வொரு முடிச்சும் சரியான கால இடைவெளி யில் அவிழ்வதும், அதை புலன் விசாரணை அதிகாரி நெருங்குவது மான திருப்பங்களில் பெரிய புதுமை இல்லை. கிரைம் திரில்லர் படங்களுக்கே உரிய கூடுதல் வேக மும், விறுவிறுப்பும் இல்லாமல் திரைக்கதை ஒரே சீராக பயணிப்பது சஸ்பென்ஸ் அனுபவத்தை குறைத்துவிடுகிறது. எனினும் கடைசி 30 நிமிடங்களில், அதிரடி விறுவிறுப்பைக் கூட்டி, ஒரு கொலை விசாரணை கதையை முடிந்தவரை சுவாரஸ்யமாக தர முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாவெல் நவகீதன்.
உயர் அதிகாரி சொல்லும் பணியை நாயகன் செய்யாமல் இருப்பது, அவரையே எதிர்த்து கேள்வி கேட்பது என காவல், தடய வியல் துறையின் நடைமுறைக்கு மாறான காட்சிகளும் வந்து செல் கின்றன. நாயகன் ஏன் இருட்டைக் கண்டு பயப்படுகிறார் என்ற பின்னணிக் காட்சிகள் போதிய அழுத்தத்துடன் இல்லை.
படத்தில் வரும் கிளைமாக்ஸ் திருப்பம் ஊகிக்க முடியாததாக இருந்தபோதும், ஊதி பெரிதாக்கிய பலூனை ஓர் ஊசியைக் கொண்டு குத்தி உடைத்துவிடுவது போன்ற உணர்வையே தருகிறது. நாயகன் பேசும் கிளைமாக்ஸ் வசனங்கள் ஒரு புலன்விசாரணை படத்துக்கு தேவையில்லாத ஆணி.
நாயகனாக ராம் அருண் கேஸ்ட்ரோ நன்கு நடித்திருக்கிறார். குறிப்பாக, இரவைக் கண்டால் பயப்படும் காட்சிகளில் முத்திரை பதிக்கிறார். விசாரணையை இயல் பாக மேற்கொள்வதிலும் பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். ஆனால், காவல் அதிகாரிக்கான மிடுக்கைத் தரவேண்டிய இடங்களில், அவரது உடல்மொழி பின்தங்கிவிடுகிறது.
நாயகியாக வரும் விஷ்ணு பிரியா நிறைவான நடிப்பை தரு கிறார். போலீஸ் உடையில் வராமல், கலர்ஃபுல்லாகவே வருகிறார். துணை கதாபாத்திரங்களில் வரு பவர்களும் அவரவர் வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
பாடல்கள் இல்லாதது சிறப்பு. காட்சிகளை தூக்கி நிறுத்தியிருக்க வேண்டிய பின்னணி இசை எடுபட வில்லை. கிரைம் கதைக்கு ஏற்ற படப்பதிவை தருவதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா சேகர் டி.எஸ்.
புதிய கதைக் களத்தைக் கொண் டிருக்கும், சவாலான புலன்விசா ரணை படத்தின் கடைசி அரை மணி நேர விறுவிறுப்பை, திரைக்கதை முழுவதிலும் கொண்டு வந்திருந் தால், இருக்கை நுனி த்ரில்லராக மாறியிருக்கும். வாய்ப்பு இருந்தும் அதை தவறவிட்டிருக்கிறது இந்த கொலை வழக்கு.