Published : 27 Dec 2019 07:09 PM
Last Updated : 27 Dec 2019 07:09 PM

முதல் பார்வை: வி1

மர்மமான முறையில் இளம்பெண் ஒருவர் கொல்லப்பட, கொலையாளியை இரண்டு தடயவியல் நிபுணர்கள் தட்டுத் தடுமாறி கண்டுபிடிப்பதுதான் ‘வி1’.

காவல் துறை அதிகாரியான அக்னிக்கு, இருட்டைப் பார்த்தாலே பெரும் பயம். எனவே, காவல் துறையின் ஒரு பிரிவான தடயவியல் துறைக்கு பணியை மாற்றிக் கொள்கிறார். அங்கும் எந்த ஒரு வழக்கையும் எடுத்துக் கொள்ளாமல், மாணவர்களுக்குத் தடயவியல் குறித்துப் பாடம் எடுக்கிறார்.

இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொலைக்கான காரணம், தடயம் என எதுவுமே கிடைக்காத நிலையில், அந்த வழக்கை அக்னியை விசாரிக்கச் சொல்கிறார் உயரதிகாரி. ஆனால், ‘முடியாது’ என அக்னி மறுக்கிறார்.

இருந்தாலும், கொலையான பெண்ணின் பெற்றோர்களின் கஷ்டத்தைப் பார்த்து வழக்கை விசாரிக்க சம்மதம் தெரிவிக்கிறார். அக்னியும், அவருடைய நண்பியான லுனாவும் சேர்ந்து துப்பு துலக்கி, கொலையாளி யார் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கின்றனர்? கொலைக்கான காரணம் என்ன? அக்னிக்கு இருட்டைப் பார்த்தால் ஏன் பயம்? ஆகிய கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதிக்கதை.

திரைக்கதையின் அடிப்படையிலேயே சில கேள்விகள் இருப்பதால், படத்துடன் ஒன்றிப்போக முடியாமல், பார்வையாளன் தனித்தே நிற்க வேண்டியுள்ளது. காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒருவர், திடீரென தடயவியல் துறைக்குப் பணியை மாற்றிக்கொள்ள முடியுமா? தடயவியல் துறைக்கென சிறப்பு படிப்புகளோ, பயிற்சிகளோ பெறத் தேவை இல்லையா? (இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘காவல் துறையில் பணியாற்றும் ஒருவர் தடயவியல் துறைக்க மாற வேண்டுமானால், அந்த மாநிலத்தின் முதல்வர் பரிந்துரைத்தால் மட்டுமே மாற முடியும்’ என தெரிவித்தனர்.)

அக்னிக்காவது பணி மாற்றம் என்று சொல்கிறார்கள். ஆனால், அவருடன் காவல் நிலையத்தில் பணியாற்றிய லுனாவும், தடயவியல் துறையில் அக்னியுடன் சேர்ந்து பணியாற்றுவது எப்படி? அதுகுறித்து வசனத்தின் மூலம் கூடக் குறிப்பிடாமல் விட்டிருப்பது, லாஜிக் மீறலாகவே இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்கட்டும்... குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை ஆராய்ந்து, அதன் வரலாற்றைச் சொல்வதுதான் தடயவியல் துறை என்பதுதான் பார்வையாளனின் அறிவு. ஆனால், தடயவியல் துறையில் இருப்பவர்களே குற்றவாளிகளைத் தேடிச் செல்வது, சந்தேகிக்கும் நபர்களைத் தங்கள் இடங்களுக்கு அழைத்துவந்து விசாரிப்பது, சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்று துப்பறிவது என காவல் நிலைய அதிகாரிகளின் வேலையைச் செய்வது எப்படி என்ற கேள்வி எழுகிறது.

தன்னுடைய மேலதிகாரியை ‘அய்யா’ என்று அழைப்பதுதான் கீழ்நிலைக் காவலர்களின் வழக்கம். இத்தனை வருடங்களாகப் படங்களில் அப்படித்தான் காட்டப்பட்டு வருகிறது, அதுதான் நிஜமும் கூட. ஆனால், ‘வழக்கை விசாரணைக்காக எடுத்துக்கொள்ள முடியாது’ என மேலதிகாரியிடமே திமிராகப் பேசுகிறார் நாயகன். இன்னொரு காட்சியில், ‘கிடைத்த தடயம் யாருடையது? அவர் முகவரி கிடைக்குமா?’ என மேலதிகாரியிடமே கேட்கிறார்.

அதேபோல், காவல் துறையைப் பொறுத்தவரை ஒருவரை வேலையைவிட்டு நீக்கினால், அதற்கு மேல் மறுபேச்சு பேச முடியாது. வேண்டுமானால் தாங்கள் விசாரித்துவந்த வழக்கை, சொந்த விருப்பத்தில் தனியாக விசாரணை நடத்தலாம். ஆனால், இந்தப் படத்திலோ மேலதிகாரியிடமே ‘எனக்கு அவன் என்ன சொன்னான்னு தெரிஞ்சாகணும்’ என கோபத்துடன் பேசுகிறார்.

மேலும், ஒரே துறையில் உள்ள மேலதிகாரியும், தன்னுடன் பணிபுரிபவரும் ஊகிக்கும் விஷயங்கள் எல்லாம் பொய், நாயகன் நினைப்பது மட்டும்தான் சரி என மற்றவர்களை மட்டம் தட்டி, நாயகன் மட்டுமே புத்திசாலி என்ற பிம்பத்தைக் கட்டமைத்திருப்பதும் கேள்வியை எழுப்புகிறது. நாயகனின் அந்த பிம்பத்தைப் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அந்தக் கதாபாத்திரம் வடிவமைக்கப்படவில்லை என்பதும் மிகப்பெரிய சறுக்கல்.

நாயகன் அக்னி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராம் அருணின் உடற்கட்டமைப்பு போலீஸ் மாதிரி இருக்கிறதே தவிர, நடிப்பில் பொருத்தம் இல்லை. போலீஸுக்கான உடல்மொழியும் சுத்தமாக இல்லை. தடயவியல் துறை உயரதிகாரியாக வருபவரின் நடிப்பும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. லுனா கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஷ்ணுபிரியாவின் நடிப்பு மட்டுமே ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது.

காவல் துறை ஏதேனும் ஒரு விசாரணைக்கு அழைத்தாலே, நாம் நேர்மையானவராக இருந்தாலும் உள்ளுக்குள் உதறல் எடுக்கும். ஆனால், விசாரணைக்கு வந்த லிங்கா, மேஜையில் ஜாலியாக மியூஸிக் போடுவதும், பெண்களைப் பார்த்து வழிவதும், அவினாஷ் கதாபாத்திரம் விசாரணை அதிகாரியைப் பார்த்து, ‘நீ புடவை கட்டினால் அழகாக இருப்பாய்’ என வர்ணிப்பதும் துளி கூட நம்பும்படி இல்லை.

த்ரில்லர் படங்களுக்கான விறுவிறுப்பையோ, ஆர்வத்தையோ தருவதில் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் எந்தப் பங்கும் ஆற்றவில்லை. சொல்லப்போனால், பின்னணி இசை சொதப்பல். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் மட்டுமே, ஒட்டுமொத்தப் படத்தின் சின்ன ஆறுதல். ஆனால், த்ரில்லர் படத்தில் ஏன் கருத்து சொல்றாங்க? எனக் கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

படத்தின் நீளம் சுமார் 110 நிமிடங்கள்தான். ஆனால், குற்றவாளியையே கண்டுபிடிக்க வேண்டாம் எனப் பார்வையாளர்கள் கதறும் அளவுக்கு மிக மிக மெதுவாக நகர்கிறது படம். த்ரில்லர் படமாக இல்லாமல், எந்தவித சுவாரசியங்களும் இன்றி பார்வையாளனைச் சோதிக்கிறது ‘வி1’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x