

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மெகா தொடர் 300 அத்தியாயங்களை கடந்துள்ளது. இதை ஆடல், பாடல் என ஒரு பிரம்மாண்ட திருவிழாவாக கொண்டாடித் தீர்த்துள்ளனர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழுவினர். சீரியலில் தனம், மூர்த்தி, மீனா, ஜீவா, கண்ணன் என்று வரும் மொத்த குடும்பமும் பங்கேற்கும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற உள்ளன. திருநெல்வேலியில் 40-க்கும் மேற்பட்டோரைக் கொண்ட ஒரே கூட்டுக் குடும்பத்தைச் சேர்த்தவர்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் நட்சத்திரங்களோடு அலங்கரிக்கும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாக உள்ளது.
இதுகுறித்து சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் கூறியதாவது:
கடந்த 12 ஆண்டுகளாக விஜய் டிவி சீரியல்களில் வெவ்வேறு கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறேன். ஒரு கூட்டுக் குடும்பப் பின்னணியில் ஒரு அழகான கதையில் பிரதிபலிப்பது பெரிய அளவில் மகிழ்ச்சி. இன்றைய சூழலில் அண்ணன், தம்பி, அக்கா, அண்ணி என கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை எவ்வளவு வலுவானது என்பதை எல்லோருக்கும் உணர்த்தும் விதமாக கதையின் போக்கு நகர்கிறது. இதுபோன்ற சீரியலில் மூத்த அண்ணனாக நடிப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. நெகடிவ் கதாபாத்திரங்களே இல்லாத கதை அமைப்பு என்பதாலும் இது பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.
அண்டை மொழி சீரியல்களை தமிழுக்கு கொண்டுவரும் சூழலில், 315 அத்தியாயங்கள் வெற்றிகண்ட ஒரு தமிழ்த் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பாக்கும் ஊக்கத்தை உருவாக்கியிருப்பதே ஒரு வெற்றிதானே! இவ்வாறு அவர் கூறினார்.