

'கோப்ரா' படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் தலைப்பு 'கோப்ரா' என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் கோடை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டாலும், அடுத்தகட்டப் படப்பிடிப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, "சென்னையில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளைக் கிட்டதட்ட முடித்துவிட்டோம். 50% படப்பிடிப்பைத் தாண்டியுள்ளோம். ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் முக்கியமான காட்சிகளைப் படமாக்க ஜனவரியில் செல்லவுள்ளோம்.
ஜனவரி மாத இறுதியில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். இந்தப் படத்தில் நாயகன் கதாபாத்திரத்துக்கும், கோப்ரா பாம்பின் குணாதிசயத்துக்கும் ஒற்றுமை இருக்கும் என்பதால் இந்தத் தலைப்பை வைத்தோம். மேலும், இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது" என்று தெரிவித்தார்கள்.
'கோப்ரா' படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விக்ரம்.