

பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஹைக்கூ' திரைப்படத்திற்கு, வரிச்சலுகை காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'இது நம்ம ஆளு' படம் தாமதம் ஆனதால், சூர்யா தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்து இயக்கிய படம் 'ஹைக்கூ'. சூர்யா, அமலா பால், பிந்து மாதவி மற்றும் பல்வேறு சிறு குழந்தைகள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆரோல் கொரெலி இசையமைத்து வரும் இப்படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்டப் பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது. 'ஹைக்கூ' படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ், " 'ஹைக்கூ' என்னும் தலைப்பை வரிச்சலுகைக்காக மாற்ற தீர்மானித்திருக்கிறோம். விரைவில் புதிய தலைப்பை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறோம். இசை வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதால், நல்ல தலைப்பு இருந்தால் சொல்லுங்கள். நன்றாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக உபயோகப்படுத்துவேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.