

'தலைவர் 168' படத்தில் ரஜினிக்கு வில்லியாக குஷ்பு நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'தர்பார்' படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். ரஜினிக்குத் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது உறுதியாகிவிட்டது.
அதே போல், இதில் ரஜினிக்கு வில்லியாக குஷ்பு நடித்து வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஆச்சரியமூட்டும் ஸ்மைலியை மட்டுமே பதிலாக அளித்துள்ளார் குஷ்பு.
இந்தச் செய்தி உண்மையா, தவறா என்று எந்தவொரு கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. இதனால், இந்தத் தகவல் உண்மையாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது.