

அழிவை நோக்கிக் கொண்டு செல்லாதீர்கள் என்று விமர்சகர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் கலை இயக்குநர் கிரண்
தமிழ்த் திரையுலகில் விமர்சகர்களால் படத்தின் வசூல் பாதிக்கிறது என்று தொடர்ச்சியாக பல்வேறு நபர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு கூட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், 3 நாட்கள் கழித்து விமர்சனம் வெளியிடலாமே என்று தெரிவித்தது. இது தொடர்பாகப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டது. மேலும், தற்போது விமர்சகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, முன்னணி கலை இயக்குநரான கிரண் தனது ட்விட்டர் பதிவில் விமர்சகர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். தனது பதிவில், "70% நல்ல படமாக இருந்தும்.. மனசாட்சியே இல்லாமல் விமர்சனம் என்ற பெயரால் படுகுழியில் தள்ளும் கொடுமை தமிழ்த் திரைப்படங்களிலே அதிகமாகக் காணப்படுகிறது.
உலகிலே சுலபமானது விமர்சனம் செய்வது . இது ஒருவகையில் ஒருவன் சோற்றில் மண்ணைப் போடுவது போலத் தான். விமர்சன விரும்பிகளே.. உங்களால் ஒரு படம் ஒடவில்லை என்றாலும் பரவாயில்லை.. ஆனால் சினிமாவை அழிவை நோக்கிக் கொண்டு செல்லாதீர்கள். சினிமாவை தவிர பிழைக்க வழி இல்லாமல் வாழ்பவர்கள் இங்கே ஏராளம்" என்று தெரிவித்துள்ளார் கிரண்
'மயக்கம் என்ன', 'கோ', 'அநேகன்', 'நானும் ரவுடிதான்', 'கதகளி', 'கவண்', 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் 'காப்பான்' உள்ளிட்ட படங்களுக்குக் கலை இயக்குநராக பணிபுரிந்திருப்பவர் கிரண். மேலும், தான் பணிபுரியும் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து, நடிகராகவும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.