

தேசிய விருது வாங்கியதற்கு கீர்த்தி சுரேஷுக்கு 'தலைவர் 168' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விக்ஞான் பவனில் டிசம்பர் 23-ம் தேதி நடைபெற்றது. விருதுகளைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கி சிறப்பித்தார். விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் 'மகாநடி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டது. தனது அப்பா, அம்மா முன்னிலையில் தேசிய விருது வாங்கியது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தேசிய விருது வாங்கிவிட்டு, டெல்லியிலிருந்து நேரடியாக ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் கீர்த்தி சுரேஷ். அப்போது படக்குழுவினர் அனைவருமே கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது வெட்டப்பட்ட கீர்த்தி சுரேஷுக்கு கேக்கை ஊட்டிவிட்டு, பூங்கொத்து கொடுத்து தன் வாழ்த்தைத் தெரிவித்தார் ரஜினி.