

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரியப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சூரரைப் போற்று'. 2டி நிறுவனம் மற்றும் குனீத் மோங்கா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
'சூரரைப் போற்று' படத்தைத் தொடர்ந்து, சூர்யாவின் அடுத்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. இதனைத் தனது 2டி நிறுவனத்தின் மூலமே தயாரிக்கவுள்ளார்.
'சிங்கம்' வரிசையில் அல்லாமல், வேறொரு களத்தில் புதுக்கதை ஒன்றைத் தெரிவித்துள்ளார் ஹரி. முதல் பாதி முழுக்க கிராமத்திலும், இரண்டாம் பாதி முழுக்க நகரத்திலும் நடப்பது போன்று திரைக்கதையை வடிவமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கவுள்ளது.
தற்போது சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் இசையமைப்பாளராக இமானை ஒப்பந்தம் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.
இமான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் ஹரி - சூர்யா கூட்டணிக்கு முதல் முறையாக இசையமைப்பது மட்டுமன்றி, இருவரின் படங்களுக்கும் முதன்முறையாக இசையமைக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.