

ஷாரூக்கான் - அட்லி கூட்டணியில் சிக்கல் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு, வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முந்தைய வசூல் சாதனை அனைத்தையும் முறியடித்தது.
'பிகில்' வெளியாவதற்கு முன்பே ஷாரூக்கானின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், இந்தக் கூட்டணி தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
ஆனால், 'பிகில்' வெளியானவுடன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார் இயக்குநர் அட்லி. இன்னும் இந்தியா திரும்பவில்லை. அங்கிருந்து கொண்டே ஷாரூக்கான் படத்தின் திரைக்கதையை முழுமையாக முடித்து அனுப்பியிருக்கிறார் அட்லி. அதனைப் படித்துவிட்டு ஷாரூக்கான் பல்வேறு மாற்றங்களைச் செய்யச் சொல்லியுள்ளார் என்று தகவல் வெளியாகவுள்ளது.
கதையாகக் கேட்கும்போது நன்றாக இருந்தது. ஆனால், திரைக்கதை வடிவமைப்பு சரியாக திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார் ஷாரூக்கான். தற்போது, ஷாரூக்கான் கூறிய மாற்றங்களைச் செய்து வருகிறார் அட்லி. அதைப் படித்துவிட்டு ஷாரூக்கான் என்ன சொல்வார் என்பதைப் பொறுத்தே, இந்தக் கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா, இல்லையா என்பது தெரியவரும்.
அட்லியைத் தவிர்த்து பல்வேறு இயக்குநர்களைச் சந்தித்துள்ளார் ஷாரூக்கான். அவர்களும் அவருக்குத் தகுந்தாற் போன்ற கதைகளைச் சொல்லி வருகிறார்கள். இதனால் ஷாரூக்கான் - அட்லி படம் நடைபெறுமா, இல்லையா என்பது விரைவில் தெரியவரும்.