கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூவர்: சிவகுமார்

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூவர்: சிவகுமார்
Updated on
1 min read

கே.பாலசந்தர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூவர் யார் என்று நடிகர் சிவகுமார் பேசியுள்ளார்.

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று (டிசம்பர் 23) அனுசரிக்கப்பட்டது. அப்போது அவரிடம் பணிபுரிந்தவர்கள், ரசிகர்கள் ஒன்றிணைந்து கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தைத் தொடங்கினர். இப்படியொரு சங்கம் உருவாவதற்கு முக்கியக் காரணமாக 'கவிதாலயா' பாபுவும் பழனிசாமியும் இருந்தனர்.

இதன் தொடக்க விழாவில் நடிகர் சிவகுமார், ராஜேஷ், இயக்குநர் சரண், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிவகுமார் பேசும் போது, "இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல்.

‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், 'மூன்று முடிச்சு' படத்தில் ரஜினி நடிக்கும் போது, "நீ கருப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே. நீ கருப்பு வைரம். தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய்" என்று அன்றைக்கே கூறியவர் கே.பாலசந்தர்.

அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர்.

கே.பாலசந்தரின் இயக்கத்தில் முக்கிய இடம்பெற்ற 5 படங்களில் ‘அக்னிசாட்சி’யும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் பாராட்டையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலசந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது” என்று நடிகர் சிவகுமார் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in