

யூடியூப் தளத்தில் 'கண்ணான கண்ணே' பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்திருப்பதை இமான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, ஜெகபதி பாபு, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விஸ்வாசம்'. இந்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், இமான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தனர். சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்தப் படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய 'கண்ணான கண்ணே' பாடல் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற பாடலாகும். தற்போது வரை பலரும் தங்களுடைய கைக்குழந்தையை வைத்து அந்தப் பாடலை டிக் டாக் வீடியோவாக உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது தொடர்பாகப் படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகிறார்கள்.
100 மில்லியன் பார்வைகள் கடந்திருப்பது தொடர்பாக இமான் தனது ட்விட்டர் பதிவில், "'விஸ்வாசம்' படத்தின் 'கண்ணான கண்ணே' பாடலை யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடக்கச் செய்ததற்கு நன்றி.
இந்தப் பாடலை நிறைய அன்புடன் நீங்கள் சொந்தமாக்கிக் கொண்டு விட்டீர்கள். இந்தப் பாடல் நிறைய உறவுகளுக்குப் பாலமாகவும், நிறைய உறவுகளைப் பலப்படுத்தவும் செய்திருக்கிறது என்பதை இந்த வருடம் நீங்கள் எனக்கு அனுப்பிய செய்திகளிலிருந்து நான் தெரிந்து கொண்டேன்.
எனது இசைப் பயணத்தில் இந்தப் பாடலை விசேஷமானதாக்கி விட்டீர்கள். மதம், சாதி, நிறம், இனங்களைத் தாண்டி உலகம் முழுவதும் சக மனிதர்களுக்கு அன்பைப் பரப்புவோம்” என்று தெரிவித்துள்ளார் இமான்.
மேலும், இந்தப் பாடல் பல்வேறு விருதுகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.