Published : 23 Dec 2019 09:48 PM
Last Updated : 23 Dec 2019 09:48 PM

முதல் பார்வை: சில்லுக் கருப்பட்டி

காதலின் நான்கு படிநிலைகளை இளையராஜா பாடல் போல, மழலையின் சிரிப்பு போல, குற்றாலச் சாரல் போல மென் உணர்வுகளால் நம்மைத் தீண்டிச் செல்லும் படம்தான் ‘சில்லுக் கருப்பட்டி’.

குப்பைக் கிடங்கில் இருந்து பிளாஸ்டிக், இரும்பு போன்ற பொருட்களைப் பொறுக்கி விற்கும் சிறுவர்களில் ஒருவன் மாஞ்சா. ஒருநாள் பிங்க் நிற குப்பை கவரில் இருந்து பதின்ம வயதில் இருக்கும் அழகிய சிறுமியான மிட்டியின் புகைப்படம் கிடைக்கிறது. அந்தச் சிறுமியால் கவரப்பட்ட சிறுவன், அந்தப் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொள்கிறான். அன்றிலிருந்து தினமும் பிங்க் நிற குப்பை கவரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அதில், அவனுக்கு என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன, அந்தச் சிறுமியை அவன் நேரில் சந்தித்தானா என்பது ‘பிங்க் பேக்’ அத்தியாயத்தின் மீதிக்கதை.

ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் முகிலனுக்கு, மீம்ஸ் உருவாக்குவதுதான் பொழுதுபோக்கு. திருமணம் நிச்சயமான நிலையில், அவனுக்கு வியாதி இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. தீர்க்கக்கூடிய வியாதிதான் என்றாலும், திருமணம் நின்றுவிடுகிறது. மருத்துவமனைக்கு ஓலா காரில் செல்லும்போது, உடன் பயணிக்கும் மது என்ற ஃபேஷன் டிஸைனருடன் நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பின் அடுத்த கட்டம் என்ன? முகிலனின் வியாதி சரியானதா? என்பது ‘காக்கா கடி’ அத்தியாயத்தின் மீதிக் கதை.

8 வருடங்களுக்கு முன்பு மனைவியை இழந்த நவநீதன், ஒருநாள் எதேச்சையாக யசோதாவைப் பார்க்கிறார். விளையாட்டு மைதானத்தில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் யசோதாவை பைனாகுலர் மூலம் பார்த்ததுமே நவநீதனுக்குப் பிடித்துப் போகிறது. அடுத்து இருவரும் மருத்துவமனையில் எதிர்பாராதவிதமாக சந்தித்துக் கொள்ள, பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. யசோதா திருமணமாகாதவர் எனத் தெரியவர, தன் அன்பைத் தெரிவிக்கிறார் நவநீதன். யசோதா அதை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது ‘டர்ட்டிள் வாக்’ அத்தியாயத்தின் மீதிக்கதை.

3 குழந்தைகளின் பெற்றோர் தனபால் - அமுதினி. நாள் முழுக்க வீட்டில் வேலை பார்க்கும் அமுதினிக்கு, கணவன் தன்னை ஒழுங்காகக் கண்டு கொள்வதில்லை, தனக்கென நேரம் ஒதுக்குவதில்லை என்ற வருத்தம் மேலோங்குகிறது. உடலுறவு கூட கடமைக்கு நிகழ்கிறது என்று வெதும்பும் அமுதினி, கோபத்தின் உச்சியில் ஒருநாள் வெடிக்கிறாள். அதன்பிறகு இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்களா? அவர்களின் மண வாழ்க்கை என்னவானது? என்பது ‘ஹே அம்மு’ அத்தியாயத்தின் மீதிக்கதை.

இப்படி நான்கு தனித்தனிக் கதைகளை முழுப் படமாக்கிக் கொடுத்துள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம். நான்கு கதைகளின் மைய நோக்கமும் காதல், அன்பு, பரஸ்பர புரிதல்தான். முழுநீள சினிமா என்ற வரையறைக்காக ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் சிறிய தொடர்பை ஏற்படுத்த முயன்றுள்ளார். அந்தத் தொடர்பு இருந்தாலும் இல்லையென்றாலும் படத்துக்குப் பாதகமில்லை.

சிறு வயது, இளம் வயது, நடுத்தர வயது, முதிர் வயது என மனித வாழ்வின் நான்கு படிநிலைகளிலும் காதலின்/அன்பின் புரிதலை, தேவையை, மகிமையை அழகியலுடன் உணர்த்திச் செல்கிறது படம். ஒவ்வொன்றும் அதனதன் வயதுக்கேற்ற புரிதலுடன் அழகாய் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டாலே படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்துவிடும். அப்படி இந்தப் படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் அச்சில் வார்த்தது போல் பொருத்தமாக உள்ளது. சிறிது பிசகினாலும் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திவிடும் கதையை, கயிற்றின் மேல் நடப்பது போலத் தாங்கியிருப்பதில் கதாபாத்திரங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், லீலா சாம்ஸன், நிவேதிதா சதீஷ், க்ரவ்மகா ஸ்ரீராம், சாரா அர்ஜுன், ராகுல் என அனைத்து நடிகர்களுமே பாராட்டுக்குரியவர்கள்.

ஜன்னலோரமாய் நின்று மழையை ரசித்துக் கொண்டிருக்கையில், கையில் சூடான காபி கோப்பையைக் கொடுத்தது போல் இதமாக இருக்கிறது பிரதீப் குமாரின் பின்னணி இசை. இருக்கிற இசைக்கருவிகள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் போட்டு உருட்டாமல், கடலையைக் கொறிப்பது போல் ஒன்றிரண்டாக இசைத்து படத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். காதலை மையப்படுத்தியது என்பதற்காக ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒன்றிரண்டு பாடல்கள் என இல்லாமல், ஒரேயொரு பாடல், அதுவும் படத்தின் தொடக்கத்தில் வைத்ததற்காகவே இயக்குநருக்கு மிகப்பெரிய நன்றி.

அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஞானமூர்த்தி என அத்தியாயத்துக்கு ஒருவர் என நான்கு பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அத்தனையும் நேர்த்தி. இயக்குநர் ஹலிதாவே எடிட்டர் என்பதாலும், நான்கு அத்தியாயங்கள் என்பதாலும் கொஞ்சமும் போரடிக்கவில்லை.

அழகியல் மட்டுமல்ல... பாடல்கள், சண்டைக் காட்சிகள் இன்றியும் ஜனரஞ்சகமாகவே இருக்கிறது படம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிரிக்க வைக்கும் விஷயங்களும் உள்ளன. பல வசனங்கள் ரசிக்க வைக்கின்றன, சில வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. எந்த நகைச்சுவையுமே உறுத்தல் இல்லாமல் சிரிக்க வைப்பது, இயக்குநரின் புத்திசாலித்தனத்தையும் பொறுப்புணர்வையும் காட்டுகிறது.

ஓலா காரில் இருவரும் எதேச்சையாக அடிக்கடி ஒன்றாகப் பயணம் செய்வது; அலெக்ஸாவில் மனைவி பேசி வைத்திருப்பதை கணவனிடம் அந்தக் கருவியே தானாகப் போட்டுக் காண்பிப்பது என சினிமாத்தனமான சில விஷயங்களும் படத்தில் இருக்கின்றன. ஆனால், கதைமாந்தர்களின் அன்பில், கதையின் அழகியலில் அவை அடிபட்டுப் போகின்றன.

பதநீர், சுக்கு, ஏலக்காய், மிளகு என நான்கும் கலந்ததுதான் ‘சில்லுக் கருப்பட்டி’. அப்படியானதொரு சுவையில் மனதைத் தித்திக்க வைக்கிறது இந்தப் படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x