

செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஷ்ணு விஷால் முடிவு செய்துள்ளார்.
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரெஜினா, யோகி பாபு, ஆனந்த்ராஜ், கருணாகரன், லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'. விஷ்ணு விஷால் தயாரித்த இந்தப் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டது. 2018-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.
படம் வெளியான சமயத்திலேயே, செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கத் திட்டமிட்டார் விஷ்ணு விஷால். ஆனால், அந்தப் படம் எப்போது தொடங்கப்படும் என்பது தெரியாமலேயே இருந்தது.
தற்போது 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். அதனைத் தொடர்ந்து 'ஜெர்ஸி' தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இவ்விரண்டு படங்களையும் முடித்துவிட்டு, செல்லா அய்யாவு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் விஷ்ணு விஷால்.
'சிலுக்குவார்பட்டி சிங்கம்' வெளியான நாளான நேற்று முன் தினம் (டிசம்பர் 21-ம் தேதி) இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் விஷ்ணு விஷால். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "கடந்த ஆண்டு இதே தினத்தில் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' திரைப்படம் 5 படங்களில் ஒன்றாக வெளியானது. பொதுமக்களிடையே நல்ல விமர்சனம் கிடைத்தது.
இதே தினத்தில் மீண்டும் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிக்கவுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன். என் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட குடும்பத் திரைப்படமாகும். அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு தொடங்கும். மீதி விவரங்கள் விரைவில்" என்று தெரிவித்துள்ளார்.