

'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' படத்தில் இயக்குநரே நடிகரானது ஏன், எப்போது வெளியீடு, யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.
சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷா ரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
2018-ம் ஆண்டு மே மாதம் வெளியான இந்தப் படம், பலராலும் விமர்சிக்கப்பட்டது. பலரும் இந்தப் படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். அதேசமயம், இந்தப் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு நல்ல லாபம் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய 'கஜினிகாந்த்' போதிய வரவேற்பைப் பெறவில்லை. மேலும், அரவிந்த் சாமி நாயகனாக நடிக்கும் 'புலனாய்வு' படத்தை இயக்கி வந்தார். 'தலைவி' படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி சென்றுள்ளதால், 'புலனாய்வு' படப்பிடிப்பு தள்ளிப்போனது. இதனால், 'இருட்டு அறையில் முரட்டு குத்து 2' படத்தின் பணிகளில் சந்தோஷ் ஈடுபட்டு வந்தார்.
அந்தக் கதையைக் கேட்ட சில நாயகர்கள் நடிக்கத் தயக்கம் காட்டவே, அவரே நாயகனாக நடிக்கப் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். ஒரேகட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் கரிஷ்மா, அக்ரிதி என்ற இரு மும்பை பெண்கள் நாயகிகளாக நடித்து வருகிறார்கள். மேலும், ஷம்மு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் டேனி, ரவி மரியா, சாம்ஸ், மனோபாலா, 'நான் கடவுள்' ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பாங்காக் சென்று சில முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். மே மாத வெளியீட்டுக்குப் படம் தயாராகிவிடும் என்றும் படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.