

'நரகாசூரன்' வெளியீடு எப்போது என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு கார்த்திக் நரேன் பதிலளித்துள்ளார்.
'துருவங்கள் 16' படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.
கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர். கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால், இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்தப் படத்தை முன்வைத்து கெளதம் மேனன் - கார்த்திக் நரேன் இருவருமே வார்த்தைப் போரில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியீட்டுக்குப் பிறகு இந்தப் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த கார்த்திக் நரேன், "எதிர்கொண்டு அமைதியாகுங்கள்... ஏனெனில் வாழ்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது" என்று தெரிவித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், "ஹாய் கார்த்திக். 'நரகாசூரன்' எப்போது வெளியாகிறது? 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் கூட வெளியாகிவிட்டது. 'நரகாசூரன்' படத்துக்காக ரொம்ப நாள் காத்திருக்கிறேன்" என்று கேள்வி எழுப்பினார்.
அவருக்குப் பதிலளிக்கும் விதமாக கார்த்திக் நரேன் "மார்ச் 2020-ல் உறுதியாக வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'மாஃபியா' படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் படம் ஜனவரி வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ஆகையால் 'மாஃபியா' வெளியீட்டுக்குப் பிறகு 'நரகாசூரன்' வெளியீட்டுக்கான முயற்சிகளை கார்த்திக் நரேன் மேற்கொள்ளவுள்ளது தெளிவாகிறது.