

செப்.17-ல் மலேசியாவில் தொடங்கவிருந்த ரஜினி - ரஞ்சித் படப்பிடிப்பு, தற்போது அதே தேதியில் சென்னையில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு துவக்கத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாணு தயாரிக்கவிருக்கும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது. ஆனால், நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் மற்றும் மலேசிய அரசின் விசா விவகாரங்கள் தொடர்பாக படப்பிடிப்பு தாமதமானது.
செப்.17 படக்குழு சென்னையில் இருந்து கிளம்புவதாகவும், செப்.18 தேதி மலேசியாவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது சென்னையில் செப்.17ம் தேதி ரஜினி - ரஞ்சித் படப்பிடிப்பு துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
சுமார் 10 நாட்கள் சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, மலேசியாவில் படப்பிடிப்பு தொடர படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
'கபாலி' படத்தில் கபாலீஸ்வரன் என்னும் தாதா பாத்திரத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். மயிலாப்பூரில் வசிப்பது போலவும், அதற்கு பிறகு மலேசியாவுக்கு அவர் குடிபெயர்வது போலவும் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளுக்கு கூலி வேலைக்கு ஆட்களை அழைத்து சென்று ஏமாற்றப்படும் தமிழர்களை காப்பாற்றும் தாதாவாக ரஜினி தோன்றவிருக்கிறார் என்கிறது படக்குழுவில் இருந்து வரும் தகவல்.
இப்படத்தில் ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ், கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.