

ஜனவரி முதல் சன் தொலைக்காட்சியில் 'சித்தி 2' ஒளிபரப்பாகும் என ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் ராதிகா, சிவகுமார், தீபா வெங்கட், யுவராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஒளிபரப்பான சீரியல் 'சித்தி'. 22 ஆண்டுகளுக்கு முன்பு, சன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைம் எனப்படும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது. இது தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற சீரியல்.
400-க்கும் அதிகமான எபிசோட்கள் ஒளிபரப்பான இந்த சீரியலின் அறிமுகப் பாடல் இப்போதும் பலரது மொபைல் ரிங் டோனாகவும், காலர் டோனாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் 'சித்தி 2' சீரியலின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சுந்தர் கே.விஜயன் இயக்கி வரும் இந்த சீரியலில் ராதிகாவுடன் பொன்வண்ணன், டேனியல் பாலாஜி, ரூபினி, கே.பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சென்னை, காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
இதன் பணிகள் தொடங்கப்பட்டாலும், எப்போது ஒளிபரப்பாகும் என்பது தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக ராதிகா தனது ட்விட்டர் பதிவில், "22 ஆண்டுகளுக்கு முன்பு 'சித்தி' தொடரை அறிமுகப்படுத்தினோம். இன்று சன் தொலைக்காட்சி மற்றும் ராடன் நிறுவனம் இணைந்து 'சித்தி 2' அறிமுகப்படுத்துகிறோம். மற்றொரு சித்தியின் பயணம் ஜனவரியிலிருந்து தொடங்கும். சுந்தர் கே.விஜயன் இயக்கி வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது