

'ஒரு கிடாயின் கருணை மனு' இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக பிரேம்ஜி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
விதார்த், ரவீனா ரவி, ஜார்ஜ் மரியான் மற்றும் பல புதுமுக நடிகர்கள் நடிப்பில் உருவான படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. ஈராஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தின் மூலம் சுரேஷ் சங்கையா இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தின் கதையோட்டம், வசனங்கள், திரைக்கதைக்காக பல்வேறு விருதுகள் கிடைத்தன. ஜூன் 2, 2017-ல் இந்தப் படம் வெளியானது.
அதனைத் தொடர்ந்து சுரேஷ் சங்கையா தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இறுதியில் முழுக்க கிராமப்புறப் பகுதிகளில் இருக்கும் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி முழுக்க காமெடியைப் பின்னணியாகக் கொண்டு கதையொன்றை உருவாக்கினார்.
அந்தக் கதைக்களத்தில் நாயகனாக பிரேம்ஜி நடிக்கவுள்ளார். அவருடன் ஸ்வயம் சித்தா, 'பிக் பாஸ்' ரேஷ்மா, ஞானசம்பந்தம், கே.ஜி.மோகன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதில் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் லட்சுமி பாட்டி நடிக்கவுள்ளார். பிரேம்ஜிக்கும் லட்சுமி பாட்டிக்கும் இடையே நடக்கும் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக சரண் ஆர்வி, எடிட்டராக வெங்கட் பணிபுரியவுள்ளனர். சமீர் பரத்ராம் தயாரிக்கவுள்ளார்.