

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் ரியாஸ்கான் நடித்து வருகிறார்.
'பொன்னியின் செல்வன்' படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கி வரும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். இதில் விரைவில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின், விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், கிஷோர் உள்ளிட்ட பலரும் இணையவுள்ளார்கள். அனைவரும் நடிப்பது உறுதியாகி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதனிடையே, இப்போது இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரியாஸ்கான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படமாக 'பொன்னியின் செல்வன்' அமைந்துள்ளது.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர்.